என்னோட கடைசி உலக கோப்பை இதுதான்.. வாய்ப்பு கொடுக்க காரணம் இவர்தான் நன்றி.. அஸ்வின் உருக்கம்.!

2023 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தியா கடந்த மூன்று முறை உலகக் கோப்பை போட்டிகளை நடத்தி இருந்தாலும் தற்போது தான் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டும் முதல் முறையாக நடைபெற இருக்கின்றன.

- Advertisement -

இந்தியாவின் 10 நகரங்களில் முத்தம் 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதற்காக பிசிசிஐ முழு அளவில் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. ஐந்தாம் தேதி உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி துவங்குவதற்கு முன்பு உலகக் கோப்பையில் கலந்து கொள்ளும் அணிகள் தற்போது பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.

- Advertisement -

நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து, இலங்கை மற்றும் பங்களாதேஷ் மோதின. இந்த போட்டிகளில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகள் முறையே வெற்றி பெற்றன . தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையின் காரணமாக ரத்தானது. இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி கவுகாத்தியில் நடைபெறுவதாக இருந்தது.

- Advertisement -

ஆனால் மழையின் காரணமாக இந்த போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டி துவங்குவதற்கு முன்பு பேட்டியளித்த இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த உலகக்கோப்பை போட்டிதான் கடைசியாக பங்கேற்கும் உலக கோப்பை என தெரிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் அஸ்வின் உலக கோப்பையில் இடம் பெறுவாரா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அக்சர் பட்டேலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவின் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று இருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். இது குறித்து பேசி இருக்கும் அவர்” இந்தியாவின் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை. நான் தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” உலகக்கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் ஆடும்போது மனதளவில் தயாராக இருப்பது அவசியம். ஏனென்றால் இது போன்ற போட்டிகளில் அழுத்தம் அதிகமாக இருக்கும், அதற்கும் என்னை தயார்படுத்தி இருக்கிறேன். நான் தொடர்ந்து சொல்வது தான் இந்த உலகக்கோப்பை என்னுடைய கடைசி உலக கோப்பையாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை எந்த அழுத்தமும் இல்லாமல் உலகக்கோப்பை போட்டி தொடரை ரசித்து விளையாட வேண்டும்” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து தனக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்க காரணமாக இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கும் இந்திய அணி நிர்வாகத்திற்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

ஆசியக் கோப்பை போட்டியில் பேசிய ரோஹித் சர்மா இந்திய அணியின் உலகக்கோப்பை திட்டங்களில் ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம் பெற்று இருக்கிறார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண்டு தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய அஸ்வின் இந்திய அணியுடன் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியிலும் விளையாடினார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறவில்லை. 2022 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்ற அஸ்வின் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் தான் மீண்டும் விளையாடினார். அந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர் இரண்டு போட்டிகளில் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார். இந்த வருடம் நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயமாக இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி இந்தியா மீண்டும் உலக சாம்பியன் ஆவதற்கு அஸ்வின் உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles