ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் குரூப் ஏ பிரிவில் முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. நேற்று கராச்சி நகரில் நடைபெற்ற துவக்க போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி பங்களாதேஷ் அணியை 228 ரன்களில் சுருட்டினர். அந்த அணியின் தவ்ஹீத் ஹீர்தாய் 100 ரன்களும் ஜாக்கர் அலி 68 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் பந்து வீச்சில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தினார். மேலும் நித்திஷ் ரானா 3 விக்கெட்டுகளும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 231 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து வெற்றி பெற்றதோடு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தங்களது புள்ளி கணக்கையும் தொடங்கியது. இந்திய அணியின் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய கில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மேலும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தலா 41 ரன்கள் எடுத்தனர். இது கில் அடிக்கும் தொடர்ச்சியான இரண்டாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய துணை கேப்டன் கில் சதமெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிய கில் இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
போட்டிக்குப் பின் ஆட்ட நாயகன் விருதை பெற்ற கில், தனக்கு மிகவும் பிடித்த சதங்களில் இதுவும் ஒன்று என தெரிவித்தார். மேலும் ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் அவரது முதல் சதம் என்பதால் இந்த இன்னிங்ஸ் தனக்கு மிகவும் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்தார். மேலும் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கிய போது கட் ஷாட் ஆடுவது கடினமாக இருந்தது எனக் கூறினார். மேலும் பந்து மெதுவாக வந்ததால் வேக பந்து வீச்சாளர்களையும் சுழற் பந்து வீச்சாளர்களைப் போல இறங்கி அடித்ததாக தெரிவித்தார்.
மேலும் பவர் பிளே ஓவர்களுக்குப் பிறகு சுழற் பந்து வீச்சாளர்களை ஃப்ரண்ட் புட்டில் விளையாடுவது கடினமாக இருந்தது. இதனால் நானும், விராட் கோலியும் சுழற் பந்துவீச்சாளர்களை பேக் புட் சென்று விக்கெட் இழக்காமல் ஒவ்வொரு ரன்னாக சேர்த்தோம் எனக் கூறினார். மேலும் களத்தில் இருந்தபோது போட்டியை முடித்துவிட்டு திரும்ப வேண்டும் என அணி நிர்வாகம் தனக்கு செய்தி அனுப்பியதாகவும் தெரிவித்தார். அடித்த 2 சிக்ஸர்களுமே தனக்கு மிகவும் பிடித்த ஒன்று எனக் கூறிய அவர், முதல் சிக்ஸர் தனது தன்னம்பிக்கையை அதிகரித்ததாக தெரிவித்தார். மேலும் இரண்டாவது சிக்ஸர் தன்னை சதத்திற்கு அருகே விரைவாக எடுத்துச் சென்றது எனக் கூறினார்.

