ஐபிஎல் தொடர் வருகிற 22ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் வகையில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் முதல் போட்டியில் போதுகின்றன. இப்போட்டி குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகமாக நிலவி வருகிறது.
மேலும் ஐபிஎல் தொடரின் முதல் 14 சீசன்கள் வரை எட்டு அணிகள் மட்டுமே பங்கேற்றன. தற்போது 10 அணிகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ப்ளே ஆஃப் வாய்ப்பைப் பெறுவது என்பது மிகவும் கடினமான காரியமாகும். கிட்டத்தட்ட உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவது போல் அவ்வளவு கடினம்.
ஏனெனில் இதில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் சரிசமமான பலத்தைப் பெற்றுள்ளதால், ஒவ்வொரு அணியும் வெற்றி பெற 100% கடின உழைப்பை கொடுக்கின்றன. எனவே வருகிற ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மிகவும் வலிமையாகக் காணப்படுகிறது.
நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் உள்ள அணியையே ஏறக்குறைய கொண்டு இருந்தாலும், சில தரமான புதிய வீரர்களும் தற்போது அணியில் இணைகின்றனர். இதனால் முன்பை விட தற்போது அதிக பலமாக காணப்படுகிறது. அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணி சில முன்னணி வீரர்களின் இழப்பால் கடந்த சில வருடங்களாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் தடுமாறிய அணி தற்போது அந்த குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் பலமாக திரும்ப வந்துள்ளது.
அதற்குப் பின்னர் மூன்றாவது பலமான அணியாக பார்க்கப்படுவது ராஜஸ்தான் ராயல்ஸ். நட்சத்திர வீரர்களைக் கொண்டுள்ள இந்த அணி கடந்த இரண்டு சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. மேலும் குமார் சங்ககாரா பயிற்சியாளராக தொடர்வதால் அவரது அனுபவம் இந்த அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும். அடுத்ததாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் நட்சத்திர வீரர்களின் அணிவகுப்பை கொண்டிருக்கும் இந்த அணி களத்தில் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நிச்சயம் மற்ற அணிகளுக்கு பெரிய சவாலாக இருக்கும்.
எனவே இந்நிலையில் சென்னை அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு சமீப காலமாகத் தான் விளையாடிய இரண்டு அணிகள் குறித்தும் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி அவர் வருகிற சீசனில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறும் என்பதையும் கணித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில்
“இந்த ஐபிஎல் சீசனில் பத்து அணிகளும் மிக வலுவாக காணப்படுகிறது. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. இருப்பினும் எனது கணிப்பின்படி சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்” என்று கூறி இருக்கிறார். எனவே இவரது கணிப்பு உண்மையாகுமா? என்பதை வருகிற சீசனில் பார்க்கலாம்.

