தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புஜ்ஜி பாபு கிரிக்கெட் போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி தொடரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள அணிகளும் பங்கேற்று விளையாட உள்ளன. இந்தத் தொடரில் பங்கேற்க இருக்கும் மும்பை அணிக்கு சர்ப்ராஸ் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்காக சூரியகுமார் செய்திருக்கும் நெகிழ்ச்சியான செயல் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் வரலாற்றில் ரஞ்சி கோப்பையை விட பழமையான கிரிக்கெட் போட்டியாக கருதப்படுவது புஜ்ஜி பாபு கிரிக்கெட் போட்டியாகும். இந்த கிரிக்கெட் போட்டிகள் 1909 ஆம் வருடம் முதல் இந்தியாவில் விளையாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் இந்த கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள அணிகளும் கலந்து கொண்டு விளையாடுகின்றன. 1960 ஆம் ஆண்டு முதல் இந்த கிரிக்கெட் தொடர் தேசிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகளின் வருகைக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டு முதல் சில காலங்கள் இந்தப் போட்டி தொடர் நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் ரஞ்சி டிராபி போட்டிகளில் தமிழக அணியின் திறனை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு முதல் புஜ்ஜி பாபு கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடைபெறுகிறது. இந்த வருடத்திற்கான புஜ்ஜி பாபு கிரிக்கெட் போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.
ரஞ்சி டிராபி போட்டிகளுக்கு தயாராவதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நட்சத்திர வீரர்களும் இந்த போட்டி தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். சுனில் கவாஸ்கர் முதல் கபில் தேவ் வரை பல்வேறு நட்சத்திர வீரர்களும் இந்த போட்டியில் கலந்து கொண்டு விளையாடி இருக்கின்றனர். இந்த வருடத்திற்கான போட்டியில் மும்பை அணி கலந்து கொண்டு விளையாட இருக்கிறது. அந்த அணிக்கு இந்திய டெஸ்ட் அணியின் இளம் வீரர் சர்ப்ராஸ் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டனும் நட்சத்திர ஆட்டக்காரருமான சூரியகுமார் யாதவ், புஜ்ஜி பாபு கிரிக்கெட் போட்டிகளில் மும்பை அணியில் இணைந்து விளையாட விரும்புவதாக புதன்கிழமை மாலை தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து மும்பை கிரிக்கெட் சங்கம் சூரியகுமார் யாதவை தங்கள் அணியில் இணைக்கவுள்ளது. சூரிய குமார் யாதவ் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அவரை புஜ்ஜி பாபு கோப்பை மும்பை அணியில் இணைக்க இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
சூரியகுமார் யாதவ் புஜ்ஜி பாபு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தயாராக இருப்பதாக மும்பை கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவரிடம் தெரிவித்துள்ளதாக மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் சூரியகுமார் யாதவ் மும்பை அணிக்காக எப்போதும் விளையாட தயாராக இருக்கிறார் எனவும் அந்த செய்தி தெரிவித்துள்ளது. ரஞ்சி கோப்பை போன்ற பெரிய போட்டிகள் மட்டுமல்லாது மும்பையில் நடைபெறும் கிளப் போட்டிகளிலும் சூரியகுமார் யாத விளையாடுவார் எனவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
மேலும் சூரிய குமார் யாதவ் வீரராக மட்டுமே விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. சூரியகுமார் யாதவ், சர்பராஸ் கான் தலைமையில் விளையாட இருப்பதாக தெரிவித்தார் என மும்பை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும் அணியை கேப்டனாக வழிநடத்த சூரியகுமார் யாதவிடம் கேட்டபோது அவர் சர்ப்ராஸ் கான் கேப்டனாக தொடரட்டும் என தெரிவித்திருக்கிறார். சர்ப்ராஸ் கானின் தலைமையின் கீழ் ஒரு வீரராக விளையாட விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். சூரியகுமார் யாதவின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

