டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு 206 ரன்கள் இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று செயின்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விராட் கோலி ஐந்து பந்துகளில் ரன்கள் ஏதுமின்றி ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அதற்குப் பிறகு களம் இறங்கிய ரிஷப் பண்ட் ஒரு முனையில் ரோகித் சர்மாவிற்கு கம்பெனி கொடுக்க, ரோகித் சர்மா அடக்கி வைத்திருந்த மொத்த ஆக்ரோசத்தையும் வெளிப்படுத்த ஒரு அணி கிடைத்தது போல் ஆஸ்திரேலியா அணியை சிதைத்தெடுத்தார். குறிப்பாக நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் 29 ரன்கள் குவித்து இந்திய அணியின் ரன்கள் வேகத்தை வேகத்தில் உயர்த்தினார்.
பண்ட் மற்றும் ரோகித் சர்மா ஜோடி 38 பந்துகளில் 87 ரன்கள் குவித்தது அதில் ரோஹித் சர்மா மட்டும் 70 ரன்கள் குவித்தார். இதில் பண்ட் 15 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற, அதற்குப் பிறகு களம் இறங்கிய சூரிய குமாரும் ரோஹித்திடம் ஸ்ட்ரைக்கை ஒப்படைத்துவிட்டு அமைதி காத்தார். சரவெடியாக வெடித்துக் கொண்டிருந்த ரோகித் சர்மா 41 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர் உடன் 92 ரன்கள் குவித்த நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார்.
இந்த நிலையில் கம்மின்ஸ் வீசிய ஒரு பந்தில் ரோகித் சர்மா ஸ்லாக் ஸ்வீப் திசையில் 100 மீட்டருக்கு ஒரு சிகிச்சை விளாசுவார். இதனைக் கண்ட முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங், “இப்படி ஒரு ஷாட்டை அவ்வளவு எளிதில் யாரும் அடிக்க முடியாது. இந்த ஸ்லாக் ஸ்வீப் ஷாட் ஆட ரோஹித் சர்மா போல தரமான வீரர் தான் தேவை” என்று புகழாரம் சூட்டினார். பின்னர் களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் 16 பந்துகளில் 31 ரன்கள் குவித்து வெளியேறினார்.
பின்னர் இறுதிக்கட்டத்தில் தூபே மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி 25 பந்துகளில் 35 ரன்கள் குவித்தது. தூபே 22 பந்துகளில் 28 ரன்களும் ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 27 ரன்களும் குவித்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதையும் படிங்க:என்ன அடி.. ஸ்டார்க்கை மிரள வைத்த ஹிட்மேன்.. ஒரே ஓவரில் 29 ரன்கள்.. அதகளம் பண்ணும் இந்தியா
ஆஸ்திரேலிய அணித்தரப்பில் ஸ்டார்க் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். பின்னர் வெற்றியி இலக்கை நோக்கி விளையாடும் ஆஸ்திரேலியா அணி தற்போது வரை ஐந்து ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் குவித்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

