எம்எல்சி லீக் தொடரின் 21வது லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து மும்பை நியூயார்க் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டிஎஸ்கே அணிக்கு ஸ்மித் படேல் – டூ ப்ளஸி இணை தொடக்கம் கொடுத்தது. இதில் ஜார்ஜ் லிண்டே வீசிய 2வது ஓவரில் ஸ்மித் படேல் 2 ரன்களில் ஆட்டமிழக்க, டூ ப்ளஸி ஆட்டத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் எடுத்து கொண்டார்.
மொரட்டு ஃபார்மில் டூ ப்ளஸி
அதிரடியாக விளையாடிய டூ ப்ளஸி, 21 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் 7 ஓவர்களில் டிஎஸ்கே அணியின் ஸ்கோர் 76 ரன்களாக உயர்ந்தது. ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும், டூ ப்ளஸி எதையும் பற்றி கவலைப்படவே இல்லை. ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி தள்ளினார். இறுதியாக டூ ப்ளஸி – ஃபெரைரா இணை கூட்டணி சேர்ந்தது.
சிறப்பாக ஆடிய டூ ப்ளஸி 51 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். மறுமுனையில் ஃபெரைரா கடைசி ஓவரில் 27 ரன்களை விளாசியதோடு, அரைசதத்தையும் விளாசினார். இதனால் டிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்களை குவித்தது. பின் களமிறங்கிய மும்பை நியூயார்க் அணிக்கு டி காக் – பூரன் இணை தொடக்கம் கொடுத்தது.
மும்பை நியூயார்க் மரண பீதி
அதில் பூரன் 8 ரன்களிலும், மொனான்க் படேல் 6 ரன்களிலும், டி காக் 35 ரன்களிலும் வெளியேற, பொறுப்பு பொல்லார்ட் கைகளுக்கு வந்தது. அவரும் தன் பங்கிற்கு அதிரடியாக ரன்களை குவிக்க, அவருக்கு உறுதுணையாக யாரும் நிற்கவில்லை. சிறப்பாக ஆடிய பொல்லார்ட் 70 ரன்கள் எடுத்திருந்த போது, கிட்டத்தட்ட தோல்வி உறுதியானது.
பின்னர் அவரும் வெளியேற, மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே டிஎஸ்கே அணியிடம் டிஃபெண்டிங் சாம்பியனான மும்பை நியூயார்க் அணி அடி வாங்கியது. மீண்டும் 39 ரன்கள் வித்தியாசத்தில் அடி வாங்கி இருப்பதால், இம்முறை மும்பை நியூயார்க் அணி பரிதாப நிலையில் இருக்கிறது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

