13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுப்போட்டிகள் முடிவடைந்த நிலையில் அரை இறுதிப் போட்டிகள் வருகின்ற புதன் கிழமை முதல் தொடங்க இருக்கிறது.
அரை இறுதியில் முதல் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது . இந்தப் போட்டி மும்பையில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் முதல் அரை இறுதியில் மோத உள்ளன.
சமீபகாலமாகவே ஐசிசி போட்டித் தொடர்களில் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு மிகப்பெரிய தடைக்கல்லாக விளங்கி வருகிறது. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்து இடம் தோல்வியடைந்தது . 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது . மேலும் 2021 ஆம் ஆண்டின் டி20 உலகக் கோப்பையில் இந்தியா நியூசிலாந்து இடம் தோற்று அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் மீண்டும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரை இறுதியில் மோத இருப்பதால் இந்திய ரசிகர்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர். இது தொடர்பாக கடந்த உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய ஓய்வு பெற்ற நியூசிலாந்து அணியின் வீரர் ராஸ் டெய்லர் இந்தியா அணி பதட்டத்தில் இருக்கும் எனக் கூறி புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இது தொடர்பாக ஐசிசி வீடியோவில் பேசியிருக்கும் அவர் அரை இறுதிப் போட்டிகள் குறித்த தனது கருத்தை பகிர்ந்து உள்ளார்.
2019 ஆம் ஆண்டு அரையிறுதி போட்டியை நினைவுகூர்ந்த ராஸ் டெய்லர்” நான்கு வருடங்களுக்கு முன்பு இந்தியா நல்ல பார்மில் இருந்து அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது . ஆனால் பாகிஸ்தானை விட அதிக நெட் ரன்ரேட் பெறுவதற்கு நாங்கள் போராடிக் கொண்டிருந்தோம். இந்தியா தற்போது முன்பைவிட மிகவும் வலிமையான அணியாக இருக்கிறது. லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று இருக்கிறது . ஆனால் இழப்பதற்கு எதுவும் இல்லை என்று இருக்கும்போது நியூசிலாந்து அணி மிகவும் அபாயகரமானதாக இருக்கும். இந்த உலகக் கோப்பையில் இந்தியா ஒரு அணியை சந்திப்பதற்கு பதட்டமடைகிறது என்றால் அது நியூசிலாந்து அணி தான் என தனது கருத்தை பகிர்ந்திருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய டெய்லர் ” மும்பை ஆடுகளத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகள் முதல் 10 ஓவர்களில் விரைவாக விக்கெட் இழக்கின்றன. இதையும் நியூசிலாந்து மனதில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் . மேலும் நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசினால் பத்துபவர்களுக்குள் விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்த முயற்சி செய்ய வேண்டும் இந்த ஆடுகளத்தில் டாஸ் முக்கியமான ஒன்று. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படும்போது நியூசிலாந்து அணியின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும். இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களை விரைவாக வீழ்த்தி நடு வரிசை ஆட்டக்காரர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா பற்றி வெகுவாக பாராட்டி இருக்கிறார் டெய்லர். சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் பெயரை வைத்துக் கொண்டு இந்தியாவில் விளையாடுவது அவருக்கு மிகவும் பெருமையான ஒன்று. இளம் வயதில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் அதிக ரன்கள் எடுப்பது மகிழ்ச்சி என்றாலும் அவர் எந்த பதட்டமும் இல்லாமல் விளையாடும் விதம் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. மேலும் இந்தியாவில் உலகக்கோப்பையின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்த்து விளையாடுவது அவருக்கு ஒரு சிறப்பான தருணம் என கூறி முடித்திருக்கிறார் ராஸ் டெய்லர்.

