உலகிலேயே அதிக கிரிக்கெட் மைதானங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இங்கு சென்னை, மும்பை, கொல்கத்தா பெங்களூர், ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்லாது சிறிய நகரங்களில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வருகைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டின் தரம் மற்றும் உள்கட்டமைப்பு சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் வருகையை தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் கிரிக்கெட் சங்கங்கள் பிரிமியர் லீக் டி20 போட்டிகளை நடத்த தொடங்கியது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் 2016 ஆம் வருடம் முதல் தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் t20 போட்டிகளை நடத்தி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் தொலைதூர மாவட்டங்களிலும் சர்வதேச தரத்திற்கு இணையான கிரிக்கெட் மைதானங்களும் வசதிகளும் அமைக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரின் காரணமாக திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் நகரங்களிலும் சர்வதேச தரத்தில் மின்னொளி வசதி கொண்ட கிரிக்கெட் மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் கோயமுத்தூரில் அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவை மாநகரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிரிக்கெட் மைதானம் அமைய இருப்பதற்காக இடத்தை தேர்வு செய்யுமாறு அரசு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இதன் அடிப்படையில் 3 இடங்களை தேர்வு செய்து விளையாட்டுத் துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பகுதிகளை நேரில் பார்வையிட்ட விளையாட்டு துறை அமைச்சர் கோயமுத்தூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒண்டிப்புதூர் பகுதியில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த மைதானம் அமைப்பதற்கான டிசைன் மற்றும் கட்டுமான பணிகள் தொடர்பான டெண்டரை தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருப்பதாகவும் டிஎன் நெக்ஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் இரண்டாவது பழமையான கிரிக்கெட் மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கோயம்புத்தூரில் அமைக்கப்பட இருக்கும் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் தமிழகத்தில் இரண்டாவது சர்வதேச மைதானமாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச தரத்திலான பல்வேறு வசதிகளுடன் இந்தியாவில் அதிக பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் இந்த மைதானம் அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போன் கிரிக்கெட் மைதானம் ஆடுகளத்தின் அமைப்பு மற்றும் அதிக பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருந்தது. எனினும் குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரில் புதியதாக கட்டப்பட்ட நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியம் 1,32,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகிலேயே அதிக பார்வையாளர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை காண்பதற்கான மைதானமாக நரேந்திர மோடி ஸ்டேடியம் அமைந்தது.
தற்போது கோயம்புத்தூரில் அமையப்பட இருக்கும் கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தை விட அதிக பார்வையாளர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை காணும் வகையில் கட்டப்பட உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் விஐபி கேலரி, கார்ப்பரேட் பாக்ஸ், ரசிகர்களுக்கான கேலரி. விளையாட்டு வீரர்களுக்கான பெவிலியன், காப்பிட்டேரியா மற்றும் ரெஸ்டாரன்ட் உள்ளிட்ட வசதிகளுடன் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட இருக்கிறது.
சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானம் மற்றும் பெங்களூரில் அமைந்துள்ள சின்னசுவாமி மைதானம் ஆகியவற்றின் அடிப்படையிலும் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தின் வடிவமைப்பிலும் புதிய மைதானத்திற்கான வடிவமைப்பை மேற்கொள்ளுமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் பிரத்தியேகமான வசதிகளுடன் சர்வதேச தரத்தில் இந்த மைதானம் வடிவமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

