ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்ததோடு முதல் அணியாக பிளே-ஆஃப் பந்தயத்திலிருந்தும் வெளியேறியது வெளியேறியது. கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் காயத்தால் வெளியேற, ஏலத்தில் எடுத்த வீரர்கள் யாரும் சரியாக வராததால், மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டது. ஆனால் மாற்று வீரர்களாக வந்த ஆயுஷ் மாஹத்ரே, ப்ரேவிஸ், உர்வில் படேல் ஆகியோரின் வருகை அரங்கத்தை அதிர வைத்துள்ளது.
இந்திய சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அதிரடியாகச் செயல்பட்டு, டாப் அணியான குஜராத்தை 83 ரன்கள் வித்யாசத்தில் சிதைத்தது. அடுத்த ஆண்டு கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் வந்துவிட்டால், அணி மேல் பலத்துடன் தென்படும். 2026 ஐ.பி.எலின் மேல் ரசிகர்கள் பெரிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பையும் வைத்துள்ளனர். இந்நிலையில் மேலும் ஓர் சிறப்பான செய்தியை சிஎஸ்கே அணியின் முன்னாள் நட்சத்திரமான சுரேஷ் ரெய்னா கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி ஒளிபரப்பில், வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா, சிஎஸ்கேயின் அடுத்த பயிற்சியாளரின் பெயர் ‘எஸ்’ என்ற எழுத்தில் தொடங்குமா எனக் கேட்டபோது, ரெய்னா புன்னகையுடன் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தார். சோப்ராவோ, “இதை முதல் முறையாக இங்கே கேள்விப் படுகிறீர்கள், அப்படியா ” எனக் கிண்டலாகப் பேசினார். ஆனால இது இன்னும் அதிகாரபூர்வமாக உறுதியாகவில்லை.
தற்போது, சிஎஸ்கேயில் ஸ்டீபன் ஃபிளெமிங் மற்றும் மைக்கேல் ஹஸ்ஸி ஆகியோர் நீண்டகால பயிற்சியாளர்களாக உள்ளனர். ஐ.பி.எல் தொடரின் சிறந்த பயிற்சியாளராக இருக்கும் ஸ்டீபன் பிளெமிங், சூப்பர் கிங்ஸின் மற்ற கை அணிகளான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் ஜோஹன்ஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் ஆகியவற்றையும் தலைமைத் தாங்கிப் பார்த்துக் கொள்கிறார். அவரது பணிச் சுமையைக் குறைக்க பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் மைக் ஹாசியை தலைமைப் பயிற்சியாளராக மாற்றி, சுரேஷ் ரெய்னாவை பேட்டிங் துறைக்கு அழைத்து வர வாய்ப்புள்ளது. அப்படி இல்லையெனில், பீல்டிங் பயிற்சியாளராக ரெய்னாவைப் பார்க்க சிறப்பா இருக்கும்.

