இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எட்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் தற்போது விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி பெங்களூர் அணியின் அதிகபட்ச ரன்களை இந்த போட்டியின் மூலம் முறியடித்து இருக்கிறது.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் அந்த முடிவை மும்பை அணியின் கேப்டன் ஹார்த்திக் பாண்டியா தவறு என உணர்ந்திருப்பார். இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் விளையாட வாய்ப்பு பெற்று இருந்தார்.
இதன்படி ஐதராபாத் அணியில் மயங்க் அகர்வால் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இன்னிங்ஸ் தொடங்கினர். மயங்க் அகர்வால் ஒருபுறம் நிதானமாக விளையாட அதற்கு மாறாக டிராவிஸ் ஹெட் மும்பை அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி கொண்டிருந்தார். 18 பந்துகளில் அரை சதத்தை கடந்த அவர் ஹைதராபாத் அணிக்காக டேவிட் வார்னர் 20 பந்துகளில் 50 ரன்கள் என்ற சாதனையை முறியடித்தார்.
24 பந்துகளை எதிர்கொண்ட அவர் மொத்தம் ஒன்பது பௌண்டரி, மற்றும் மூன்று சிக்ஸர்களை விளாசி 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் அரை சதத்தைக் கடந்து டிராவிஸ் சாதனையை முறியடித்தார். 23 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரி, ஏழு சிக்ஸர்கள் என 62 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
பின்னர் மிடில் ஆர்டரில் களமிறங்கிய மார்க்ரம் மற்றும் கிளாஸன் ஆகிய இருவரும் இந்த ரன் ரேட்டை அப்படியே கடைசிவரை எடுத்துச் சென்றனர். இதில் முக்கியமாக கிளாஸன் 34 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்கள் என்று விளாசி 80 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
மற்றொரு ஆட்டக்காரர் மார்க்ரம் 28 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு பெங்களூர் அணி 263 ரன்கள் குவித்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது.
ஐபிஎல் வரலாற்றில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் :
2013ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 263/5 புனே வாரியர் அணிக்கு எதிராக.
2023ஆம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் 257/5 பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 248/3 குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக
2010 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் 246/5 ராஜஸ்தான் அணிக்கு எதிராக.

