இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.
ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி சென்னை அணியின் இன்னிங்சை கேப்டன் ருத்ராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா தொடங்கினர். முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ரவீந்தரா கடைசி இரண்டு போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
12 ரன்களில் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சில் வெளியேற, அதற்குப்பின்னர் கேப்டன் ருத்ராஜ் 26 ரன்கள் குவித்த நிலையில் சபாஷ் அகமதுவின் பந்துவீச்சில் வெளியேறினார். இதற்குப் பிறகு அனுபவ வீரரான ரகானே மற்றும் ஆல்ரவுண்டர் சிவம் துபே ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். ரகானே ஒரு முனையில் நிதானமாக விளையாட, மறுமுனையில் சிவம் தூபே தனது அதிரடியை வெளிப்படுத்தினார்.
24 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் இரண்டு பவுண்டரி நான்கு சிக்ஸ்கள் என 45 ரன்கள் விளாசிய நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு இந்த முறை மிகவும் பொறுமையாக விளையாடிய ரகானே 30 பந்துகளில் 35 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது.
ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் சன்ரைசர்ஸ் அணியும் பேட்ங்கில் தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூழ்நிலை அதற்கு நேர்மாறாக அமைந்தது. தொடக்கத்திலிருந்து சன்ரைசர்ஸ் அணியினர் சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடிக்க தொடங்கினர். தீபக்சகர் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் உடன் தொடங்கிய ட்ராவிஸ் ஹெட் அதற்கு அடுத்த ஓவரில் அபிஷேக்சர்மா தனது அதிரடியை வெளிப்படுத்தினார்.
தனது முதல் போட்டியில் களமிறங்கிய முகேஷ் சௌத்ரி இந்த முறை அபிஷேக்சர்மாவிடம் வசமாக சிக்கிக்கொண்டார். முகேஷ் சவுத்ரியின் ஒரே ஓவரில் அபிஷேக் சர்மா 27 ரன்களை விளாசினார். ஹைதராபாத் அணி முதல் மூன்று ஓவர்களிலேயே 50 ரன்கள் எட்டியது. பவர் பிளவின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் குவித்து இருந்தது. 12 பந்துகளில் மூன்று பவுண்டரி நான்கு சிக்ஸர்கள் என 37 ரன்கள் குவித்த நிலையில், அபிஷேக் ஷர்மா வெளியேறினார். சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்த பிறகு சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் அதனை கன கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டனர்.
இதையும் படிங்க:தோனி விளையாடிய அந்த ஒரு ஷாட்.. மனுஷன் வேற மாதிரி ஃபார்ம்ல இருக்காரு.. தோனி குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர்
சிறப்பாக விளையாடிய மார்க்ரம் 36 பந்துகளில் அரை சதம் அடித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 31 ரன்கள் குவித்து வெளியேறினார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி பத்தொன்பதாவது ஓவரில் 166 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க இரண்டு பேட்ஸ்மேன்கள் இடது கை ஆட்டக்காரர்களாக இருந்தனர். சென்னை அணியில் இரண்டு ஆப் ஸ்பின்னர்கள் இருந்தும் ருத்ராஜ் பவர் பிளேவில் அவர்களை பயன்படுத்தவில்லை.
பவர் பிளேவில் தீபக்சகர் வீசிய ஓவரில் டிராவிஸ் ஹெட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மொயின் அலி வீணடித்தார். நான்கு போட்டியில் விளையாடிய சென்னை அணிக்கு இது தற்போது இரண்டாவது தோல்வியில் முடிந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

