நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய நான்காவது போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவி இருக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணி தற்போது வெளி மைதானங்களில் தோல்வியைத் தழுவி இருக்கிறது.
ஏற்கனவே டெல்லி அணியுடன் பெற்றிருந்த தோல்விக்கு ஈடு கட்டும் வகையில் இந்த போட்டியை வெற்றிக்கனக்குடன் துவங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டமிட்டு இருந்தது. எனவே ஹைதராபாத் உப்பல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் குவித்தது.
சென்னை அணியின் ஆல் ரவுண்டர் சிவம் தூபே மட்டும் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 45 ரன்கள் குவித்து வெளியேறினார். குறிப்பாக ஆடுகளம் மெதுவாக இருந்ததால் சென்னை அணியின் நட்சத்திர வீரர்கள் கூட ரன்களைக் குவிக்க முடியாமல் திணறினார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களுக்கு பெரும்பாலும் மெதுவான பந்தையே வீசினர்.
இதில் பவர் ஹிட்டர் சிவம் தூபேவைத் தவிர, மற்ற பேட்ஸ்மேன்களால் பெரிய ஷாட்களுக்கு செல்ல முடியவில்லை. பந்துகளை விட வெறும் ஐந்து முதல் 10 ரன்களை அதிகமாக எடுத்தனர். இதனால் இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்கள் குவித்தது. எனவே ஹைதராபாத் அணி பேட்ஸ்மேன்களும் சிரமப்படுவார்கள் என்று எதிர்பார்த்த வேளையில்,’இளங்கன்று பயமறியாது’ என்பதைப் போல சன்ரைசர்ஸ் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா ஆட்டத்தை முற்றிலுமாக மாற்றி விட்டார்.
பெரும் 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் மூன்று பவுண்டரி, நான்கு சிக்ஸர்களுடன் 37 ரன்கள் குவித்தார். முகேஷ் சௌத்ரியின் ஒரு ஓவரில் 26 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடுகளம் மெதுவாக இருந்த போதிலும், அபிஷேக் ஷர்மாவின் இந்த அதிரடி ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் அணியின் பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுலபமாக ரன்களைக் குவித்தனர். இதனால் 18.1 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி இலக்கை அடைந்தது. போட்டிக்கு பின்னர் ஆட்டநாயகன் விருது பெற்ற அபிஷேக் ஷர்மா கூறும் பொழுது
“நாங்கள் முதலில் பந்து வீசியதால் இந்த ஆடுகளம் மெதுவாக இருக்கிறது என்பதை உணர்ந்து விட்டோம். எனவே பவர் பிளேவில் புதிய பந்தில் ரன்களை எடுக்க திட்டமிட்டோம். ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஒரு அணியாக தயாராக எங்களுக்கு நேரம் கிடைத்தது. நாங்கள் வகுத்த திட்டத்தைப் போல பவர் பிளேவில் ரன்களைக் குவித்தோம். தனிப்பட்ட முறையில் அதிக ரன்கள் அடிப்பது முக்கியம். ஆனால் இன்று ஒரு திட்டப்படி சென்றேன். அடுத்த ஆட்டத்தில் அதிக ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன்.
இதையும் படிங்க:நாங்க தோத்ததுக்கு காரணமே இந்த “கருப்பு மண்தான்”.. முக்கியமா ஒரு தப்பு பண்ணினோம்.. சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் பேட்டி
இந்த வெற்றி எனது கடின உழைப்புக்கு கிடைத்திருக்கிறது. இதற்கு எனது அப்பா, பிரைன் லாரா சார், யுவராஜ் சிங் பாஜி ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். தொடக்கத்தில் இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கிய சென்னை அணி இரண்டு போட்டியிடிலும் தோல்வி பெற்று, தற்போது சிக்கலில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

