இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்து இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்யும் விதம் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் முதல் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி சதம் அடித்திருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஸ்டார்க்கிடம் நீங்கள் வீசுகிற பந்தின் வேகம் குறைவாக இருக்கிறது என்று கூறினார்.
அதற்குப் பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் என அனைத்திலும் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் ஜெய்ஸ்வால் எப்போதுமே மட்டையால் தான் பேச வேண்டுமே தவிர வாயால் குறைவாகவே பேச வேண்டும் என்பது போல சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது “நீங்கள் எப்போதுமே உங்களது பேட்டால் மட்டுமே பேச வேண்டுமே தவிர வாயால் பேசக்கூடாது. மேலும் நீங்கள் எதிர்கொள்ளும் பந்துவீச்சாளர் ஏதாவது கூறினால் அதற்கு பதில் சொல்லலாமே தவிர தானாகவே அவரிடம் எதுவும் கூறக்கூடாது. இந்த விளையாட்டு முறையே சற்று வித்தியாசமானது எனவே ஜெய்ஸ்வால் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக ஜெய்ஸ்வால் அனைத்து திசைகளிலும் ரன் அடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது காற்றில் அதிகமாக அடிப்பதை விட தரையோடு சேர்த்து அடிக்க முயற்சி செய்ய வேண்டும். மேலும் அவர் மேலோட்டமாக பேட்டிங் செய்வது அவரது விக்கட்டுக்கு அதிக பாதுகாப்பை கொடுக்கும்” என்று சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார். மேலும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவது அவசியமாகிறது. எனவே இந்திய அணி இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

