சாம்பியன்ஸ் டிராபி… மீண்டும் சிக்கலில் ஆஸ்திரேலியா… ஒய்வை அறிவித்த நட்சத்திர வீரர்

50 ஓவர் கிரிக்கெட் வடிவத்தில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 2 அணிகளுக்குமிடையே நடைபெற்ற முதல் போட்டியை ஆஸ்திரேலியா வென்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி அணிக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

2023 ஆம் வருட உலகக் கோப்பையில் முதல் 8 இடங்களை பெற்ற அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் வைத்து வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பைக்கு அடுத்தபடியாக ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் முக்கிய தொடராக கருதப்படும் இந்த கோப்பையை வெல்வதற்கு சர்வதேச கிரிக்கெட் அணிகள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

- Advertisement -

சாம்பியன் டிராபி போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளின் வீரர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான மார்கஸ் ஸ்டாய்னிஸ் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் விளையாடி வந்த அதிரடி ஆல்ரவுண்டரான ஸ்டாய்னிஸ் 2023 ஆம் வருட உலகக்கோப்பை வெற்றியில் முக்கிய பங்காற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இன்று காலை தனது ஓய்வு குறித்த அறிக்கையை வெளியிட்டிருக்கும் ஸ்டாய்னிஸ் ஆஸ்திரேலியா அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெற்றது தனது வாழ்வின் மிகச் சிறப்பான தருணம் என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 10 வருடங்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது தனது வாழ்வில் சிறப்பான பயணமாக இருந்தது என தெரிவித்தார். தனது நாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெற்று விளையாடியதை நினைத்து என்றும் பெருமைப்படுவேன் எனவும் கூறினார்.

மேலும் தனது ஓய்வு குறித்து தெரிவித்த ஸ்டாய்னிஸ் இது ஒரு எளிமையான முடிவல்ல என கூறி இருக்கிறார். ஆனாலும் சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் டி20 போட்டிகளில் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு விளையாட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளரான ஆன்ட்ரு மெக்டொனால்டிற்கு தனது நன்றியை தெரிவித்த ஸ்டாய்னிஸ் தான் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடிய காலங்களில் தனக்கு உறுதுணையாக இருந்ததை மிகவும் பாராட்டினார்.

- Advertisement -

2015 ஆம் வருடம் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஸ்டாய்னிஸ் இதுவரை 71 போட்டிகளில் விளையாடி 1495 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 6 அரை சதங்களும் 1 சதமும் அடங்கும். மேலும் ஒரு நாள் போட்டிகளில் 48 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார். 2018 ஆம் வருடம் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதையும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த அணியின் ஆல் ரவுண்டர் மிச்சல் மார்ஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஹேஸல்வுட் காயம் காரணமாக விலகியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பது சந்தேகமாகியிருக்கும் நிலையில் அந்த அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் திடீர் ஓய்வை அறிவித்திருப்பது ஆஸ்திரேலியா அணிக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles