ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஏராளமான வீரர்கள் கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகி வருகின்றனர். மும்பை அணியின் பும்ரா, லிசார்ட் வில்லியம்ஸ், அல்லா கசன்ஃபர் உள்ளிட்டோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். ஆனால் டெல்லி அணிக்காக ரூ.6.25 கோடிக்கு வாங்கப்பட்ட ஹாரி ப்ரூக், தேசிய பணி காரணமாக விலகி இருக்கிறார்.
கடந்த சீசனிலும் டெல்லி அணிக்காக வாங்கப்பட்ட அவர், கடைசி நேரத்தில் விலகினார். இருந்தாலும் இந்த சீசனில் டெல்லி அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்து ரூ.6.25 கோடிக்கு போட்டி போட்டு வாங்கியது. ஆனால் இங்கிலாந்து அணியின் ஒயிட் பால் கேப்டன்சி அளிக்கப்பட இருப்பதால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முடிவை ஹாரி ப்ரூக் எடுத்துள்ளார்.
ஏமாற்றிய ஹாரி ப்ரூக்
இதனால் இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக்-க்கு அடுத்த 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் இருந்து தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி அணியின் வீரர்கள் அனைவரும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். புதிய பயிற்சியாளர் ஹேமங் பதானி மற்றும் இயக்குநர் வேணுகோபால் ராவ் இருவரும் வீரர்களை தயார் செய்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம் கேஎல் ராகுல் இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதேபோல் இந்த சீசனில் கேஎல் ராகுல் முழுமையாக மிடில் ஆர்டரில் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. நம்பர் 4 அல்லது நம்பர் 5 பேட்ஸ்மேனாக கேஎல் ராகுலை பயன்படுத்த டெல்லி அணி நிர்வாகம் முடிவு எடுத்திருக்கிறது.
ஷனகாவை ஒப்பந்தம் செய்த டெல்லி
இந்த சூழலில் டெல்லி அணியின் ஹாரி ப்ரூக்-க்கு மாற்று வீரரையும் அந்த அணியின் நிர்வாகம் சைலண்டாக ஒப்பந்தம் செய்துள்ளது. இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் டசுன் ஷனகாவை டெல்லி அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் டெல்லி அணி நிர்வாகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஐஎல்டி20 லீக் தொடரில் துபாய் கேபிடல்ஸ் அணிக்காக ஷனகா ஆடினார். அந்த தொடரில் துபாய் கேபிடல்ஸ் அணி இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை சந்தித்தது. 12 போட்டிகளில் ஆடிய ஷனகா 164 ரன்களை விளாசினார். இதனால் ஐபிஎல் தொடரில் ஷனகாவை டெல்லி அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

