நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. தென் ஆப்பிரிக்கா எளிதாக பேட்டிங் செய்த ஆடுகளத்தில் இந்திய அணி தடுமாறியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் தென் ஆப்பிரிக்க அணியின் பீல்டிங் உலகத் தரத்தில் இருந்தது. இத்துடன் தென் ஆப்பிரிக்க பவுலர்கள் மிகச் சிறந்த வேரியேஷன்களை காட்டி இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தார்கள்.
இந்த போட்டியில் இரண்டாவதாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க அணி நிறைய மெதுவான பந்துகளை வீசியது. இதன் காரணமாக இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சரியான டைமிங் கிடைக்கவில்லை. அவர்கள் அதிரடியாக விளையாட நினைத்து பந்தை அடிக்கும் பொழுது கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆடுகளத்திற்கு ஏற்ற வகையில் உடனடியாக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சரியான திட்டத்தை தீட்டிக் கொண்டு வந்தது குறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டுகிறார்கள்.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் பேசும்பொழுது ” இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு திட்டமிடும் போது கடைசி நேரத்தில் நாங்கள் ஈகோவை விட்டுவிட்டு கிடைக்கும் இடைவெளிகளில் நன்றாக ஓடி ரன்கள் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். மேலும் ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் ஒட்டி மெதுவாக பவுன்ஸ் ஆனது. இதை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் மெதுவான பந்துகளை வீச வேண்டும் என்று முடிவு செய்தோம். நாங்கள் விளையாடியதில் நேற்று கொடுக்கப்பட்ட ஆடுகளம் மிகவும் வித்தியாசமானது. இதற்கு தகுந்த மாதிரி மாறிக்கொண்ட எங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு நான் முழு பெருமையையும் சேர்க்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

