இந்தியன் பிரீமியர் லீக் 2025 சீசன் துவங்கி சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது. 2 வாரங்களே ஆகிருந்தாலும், பெரும்பாலானோர் எதிர்பார்த்த சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகள் கடைசி 3 இடங்களில் தத்தளிக்கிறது. மறுபக்கம் டெல்லி, குஜராத், பெங்களூர், பஞ்சாப் டாப்பில் உள்ளனர்.
அண்மையில் முன்னாள் இந்திய லெஜன்ட் சவுரவ் கங்குலி, ஐ.பி.எல் தொடரில் சிறந்த அறிவாற்றல் கொண்ட அணி மற்றும் பயிற்சியாளர் என குஜராத் டைட்டன்ஸ் அணியையும் அதன் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவையும் வெகுவாகக் பாராட்டியுள்ளார். கடந்த சீசனில் கடைசி இடத்தில் முடித்த குஜராத், தற்போது 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் தன் ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்து வருகிறது.
இதுப் பற்றி சவுரவ் கங்குலி கூறியதாவது, ” குஜராத் டைட்டன்ஸ் முதல் சீசனிலிருந்து தனது பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறது. அவர்களது அணி அமைப்பிலும் அணுகுமுறையிலும் பெரிய அளவிலான கிரிக்கெட் அறிவு தெரிகிறது. அவர்களது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பவர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா. ” எனப் பாராட்டியுள்ளார் கங்குலி.
பார்பதற்கு சுமாரான அணியாக தெரிந்தாலும், 2022-இல் தனது முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய குஜராத் அணி, அதன் பின்னர் மறு ஆண்டும் இறுதிப் போட்டியின் கடைசி பந்து வரை அபாரணகாச் செயல்பட்டது. கடந்த ஆண்டு பாண்டியா விலக, புதிய கேப்டன் கில் தலைமையில் சற்று தடுமாறினாலும், இந்த ஆண்டும் தரமான கம்பேக் கொடுத்துள்ளது.
இளம் வீரர்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு சுதந்திரம் அளிப்பது மற்றும் பவுண்டரி எல்லைக்கு அருகில் நின்று முழு போட்டிக்கும் வீர்களுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கும் விதத்தில் நெஹ்ரா தனித்துவமான பாணியைக் கையாண்டு வருகிறார். கேப்டன் சுப்மன் கில்லின் தலைமையிலும், நெஹ்ரா அணுகுமுறையாலும், வீரர்களின் சீரான செயல்பாட்டாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி நல்ல நிலையில் விளையாடி வருகிறது குஜராத் டைட்டன்ஸ்.

