சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த இந்தியா 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடர்களில் விளையாடியது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இலங்கை அணி களுக்கு இடையே மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி தொடங்கியது. ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நிலையிலும் இந்தியா விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை உள்ளடக்கிய வலுவான அணியையே களம் இறக்கியது.
இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்று பெரும்பாலான கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்திருந்த நிலையில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. மேலும் 27 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக இலங்கையிடம் ஒரு நாள் போட்டி தொடரை இழந்த மோசமான சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இந்தத் தொடர் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அதிரடி வீரர் ஸ்ரீகாந்த் இந்தியாவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக தனது சேனலில் அவரது மகன் அனிருத் ஸ்ரீகாந்துடன் நடைபெற்ற விவாதத்தில் பேசிய ஸ்ரீகாந்த் ” ஆடுகளத்தில் முகமது சிராஜ் தேவையில்லாத ஆட்டிட்யூட் காட்டுவதாக தெரிவித்திருக்கிறார். தனது பந்துவீச்சில் ரன்கள் அதிகமாக சென்று கொண்டிருக்கும்போது ஒருவரால் எப்படி களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்ள முடியும்.? எனவும் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பினார். விளையாட்டின் போது வீரர்களுக்கு கோபம் வருவதும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதும் நடக்கக் கூடிய ஒன்றுதான். ஆனால் அந்த ஆக்ரோஷம் இயல்பான வரும் ஒன்றாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்..
எதிரணியினரிடம் வம்பு இழுப்பதற்காக போலியான ஆக்ரோஷம் காட்டுவதால் விளையாட்டிற்கு எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். களத்தில் அவரது பந்துவீச்சு தான் பேச வேண்டும் வாய்ப்பேச்சு மற்றும் நடிப்பு எடுபடாது எனவும் கடுமையாக விமர்சித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். மேலும் கடந்த சில காலங்களாக முகமது சிராஜின் பந்துவீச்சு எடுபடாமல் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
ஒரு நாள் போட்டிகளை பொருத்தவரை கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மட்டும் சிறப்பாக செயல்பட்ட சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதன் பிறகு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டி தொடரிலும் இலங்கை அணி உடன் மட்டுமே சிராஜின் பந்துவீச்சு எடுபட்டது. அதன் பிறகு அவரால் சொல்லிக் கொள்ளும்படியாக பந்து வீச முடியவில்லை. இப்படி இருக்கும்போது தேவையில்லாமல் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது எந்த பயனையும் அளிக்காது என கடுமையாக விமர்சித்தார் ஸ்ரீகாந்த் .

