இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் வலிமையான ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இரண்டு விகட்டுகளை மட்டுமே இழந்து 169 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இன்னொரு சுவாரசியமாக டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டி குறித்து பேசி உள்ள ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராஸா ” ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெற்றி பெற்றது மகிழ்ச்சியையும் தாண்டி பெருமையாக இருக்கிறது. என்னுடைய வீரர்கள் வெற்றிக்காக விளையாடிய விதத்தைப் பார்த்தபோது, தம்பிகள் சிறப்பான சாதனை செய்வதை அண்ணன் பார்ப்பது போன்ற உணர்வுடன் பார்த்தேன். மேலும் இவர்கள் எல்லையில் போராடி பந்தை தடுத்ததை பார்த்தபோது எவ்வளவு வெற்றியை விரும்புகிறார்கள் என்று தெரிந்தது. இன்று எங்கள் அணி வீரர்கள் மூன்று துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள்”
“இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் நீங்கள் ஆரம்பத்தில் பெரிய ரன்னை எடுப்பதற்கு முயற்சி செய்தால் பெரிய அளவில் விக்கெட்டுகளை இழந்து விடுவீர்கள். இதன் காரணமாக நான் எங்கள் அணி 10 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்திருந்த போது மகிழ்ச்சியாகவே இருந்தேன். மேற்கொண்டு நாங்கள் 20 ஓவர்களில் 190 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அதற்கு நாங்கள் முயற்சி செய்திருந்தால் 140 ரன்னில் ஆல் அவுட் ஆகி இருப்போம். எனவே நாங்கள் 170 ரன்கள் எடுத்தால் போதும் என்று பேட்டிங் செய்து அந்த இலக்கை அடைந்தோம்” என்று கூறியிருக்கிறார்.

