நடப்பு சாம்பியன் கேப்டனாக பஞ்சாப் அணியைத் தலைமைத் தாங்கி வருபவர் ஸ்ரேயாஸ் ஐயர். கேப்டன்சி, பேட்டிங் என இரண்டிலும் அவர் சிறப்பாகச் செயல்பட பஞ்சாப் அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அண்மையில் அவர் பஞ்சாப் கிங்ஸ் ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, கடைசியாக அழுத தருணதைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்க்கு ஐயர் உணர்ச்சிகரமாக ஓர் நிகழ்வைப் பற்றி பகிர்ந்தார். அவர் கூறியதாவது, ” நான் கடைசியாக அழுதது சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் நாள் பயிற்சியில் தான். அழுதேன், அழுதேன், தேம்பி தேம்பி அழுதேன். காரணம், பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது நான் எதிர்பார்த்த அளவு எதுவுமே சரியாக போகவில்லை. என் மீது எனக்கு வந்த கோவத்தில், உண்மையிலேயே நான் அழுதுவிட்டேன். நான் அவ்வளவு எளிதில் அழமாட்டேன் என்பதால், அதுவே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ” என்று கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னர் இங்கிலாந்து ஓடிஐ தொடரில் அவரை விளையாட வைக்கும் திட்டத்தில் கம்பீர் இல்லை. விராட் கோலிக்கு ஏற்பட்ட காயத்தால், ஐயர் உள்ளே வந்து அதிரடியாக விளையாடி தன் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். பின்னர் சாம்பியன்ஸ் டிராபியில் அதே ஃபார்மில் அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் 243 ரன்கள் குவித்து, இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். தொடரில், அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவதாக முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட சரியான வீரருக்கான தேடல் இனித் தேவையில்லை என்கிற அளவுக்கு, தனது திறமையை நிரூபித்து ஸ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்தைத் தன் வசம் ஆக்கியுள்ளார்.
இந்த உத்வேகத்தை டி20-க்கும் எடுத்துச் சென்றுள்ள ஐயர், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎலில் இதுவரை மூன்று இன்னிங்ஸ்களில் 159 ரன்கள், அதிரடியான 206.49 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அசத்துகிறார். ரிக்கி பாண்டிங் – ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணியில் மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள பஞ்சாப், தன் முதல் ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக உள்ளது.

