நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 7 நாட்களில் தொடங்குகிறது. மார்ச் 22ல் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் ஆட்டத்தில் கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்காக 10 அணிகளும் சிறப்பாக தயாராகி வருகிறார்கள். மெகா ஏலம் முடிவடைந்த நிலையில், 10 அணிகளும் சிறப்பாக தயாராகி இருக்கிறது.
இம்முறை லக்னோ அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் லக்னோ அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் இணைந்துள்ளார். அதேபோல் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்டு கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட், நிக்கோலஸ் பூரன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரை கொண்ட மிடில் ஆர்டர் அமைந்துள்ளது.
லக்னோ அணியில் ஷர்துல் தாக்கூர்
இருந்தாலும் லக்னோ அணியின் பவுலிங் கொஞ்சம் அனுபவமின்றி உள்ளது. ஏற்கனவே மயங்க் யாதவ், ரவி பிஷ்னாய், மோசின் கான் ஆகியோர் தக்க வைக்கப்பட்டனர். இதன்பின் மெகா ஏலத்தில் ஆவேஷ் கான் பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்டுள்ளார். இதில் மயங்க் யாதவ் மற்றும் மோசின் கான் இருவருமே அதிகமாக காயம் அடைபவர்கள்.
தற்போது கூட மயங்க் யாதவ் காயம் காரணமாக என்சிஏவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதுவரை அவர் ஃபிட்னஸை நிரூபிக்கவில்லை. இதனால் மாற்று வீரரை கண்டறிய வேண்டிய சூழலுக்கு லக்னோ அணி தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் லக்னோ அணியின் ஜெர்சி அணிந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
மெகா ஏலத்தில் நடந்த சோகம்
இதனால் ஷர்துல் தாக்கூர் லக்னோ அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும் ஜாகீர் கானுடனான நட்பு காரணமாக லக்னோ அணியின் பயிற்சி முகாமில் ஷர்துல் தாக்கூர் இருக்கிறார். சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த ஷர்துல் தாக்கூர் மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.
இருந்தாலும் ரஞ்சி டிராபியில் அசத்தலாக செயல்பட்டு வருகிறார். இதனால் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குஜராத் அணியின் முதல் சீசனின் போது மோகித் சர்மா நெட் பவுலராக ஒரு ஆண்டு பணியாற்றிய பின், 2வது ஆண்டு ஏலத்தில் வாங்கப்பட்டார்.

