ஐபிஎல் கிரிக்கெட் தொடங்குவதற்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் சூழலில், பிசிசிஐ தரப்பில் 2 புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நடக்கவுள்ள முதல் லீக் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. கொல்கத்தா மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டிக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இந்த சூழலில் பிசிசிஐ தரப்பில் 2 புதிய விதிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதாவது ஐபிஎல் வரலாற்றில் இரவு நேர போட்டியின் போது ஏற்படும் பனிப்பொழிவு காரணமாக பவுலர்கள் பவுலிங் செய்ய முடியாத சூழல் ஏற்படும். இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்தது. இதனால் 2வது பேட்டிங் செய்யும் அணியே வெற்றிபெறும் என்ற நிலை இருந்து வந்தது.
2 பந்துகள்
அதனை தடுக்கும் வகையில் பிசிசிஐ தரப்பில் 2 பந்துகள் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் 10 ஓவர்கள் புதிய பந்திலும், அடுத்த 10 ஓவர்கள் செமி புதிய பந்து கொடுக்கப்படும். அதாவது முதல் 10 ஓவர்கள் புதிய பந்தில் பவுலிங் செய்து முடித்த பின், தேவையென்றால் கேப்டன் புதிய பந்து தேவை என்று நடுவரிடம் கோரிக்கை வைக்கலாம்.
அதேபோல் கேப்டன் கோரிக்கை வைத்த பின் மொத்தமாக புதிய பந்து அளிக்கப்படாது. அதே தரத்திலான வேறு புதிய பந்துகள் அளிக்கப்படும். அதேபோல் பனிப்பொழிவை கணக்கில் கொண்டு நடுவரே முடிவு செய்வார். இதன் மூலமாக பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு இடையிலான பேலன்ஸ் சரியாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.
2வது விதியில் மாற்றம்
இதுமட்டுமல்லாமல் கொரோனா காலத்தின் போது பந்தில் எச்சில் தொட்டு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. கொரோனா பரவல் ஏற்படும் என்பதால் இந்த விதியை ஐசிசி கொண்டு வந்தது. ஆனால் கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பின்னரும் இந்த தடை நீக்கப்படவில்லை. அண்மையில் முகமது ஷமி எச்சில் பயன்படுத்துவதற்கான தடையை நீக்க வேண்டும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த சூழலில் ஐபிஎல் தொடருக்கு முன்பாக அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால் கேப்டன்கள் அதற்கேற்ப திட்டமிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அதேபோல் இந்த 2 புதிய விதிகளும் பவுலர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் இம்பேக்ட் பிளேயர் விதியை பவுலர்களால் எளிதாக சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

