இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தனது 26வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடி இரட்டை சதம் உட்பட 4 சதங்களை விளாசிய சுப்மன் கில், 700க்கும் அதிகமான ரன்களை விளாசி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இந்திய டி20 அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் உயர்ந்துள்ளார்.
பெட் வைத்து ஆடிய சுப்மன் கில்
ஆசியக் கோப்பை தொடரில் சுப்மன் கில்லுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில் சுப்மன் கில்லின் சிறு வயதில் நடந்த சம்பவம் குறித்து அபிஷேக் சர்மா பேசி இருக்கிறார். அதன்படி சுப்மன் கில்லின் தந்தை சிறுவயது முதலே தனது மகனின் கிரிக்கெட் ஆசையில் தீவிரமாக இருந்திருக்கிறார். அதற்காக ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் பெட் என்று ஒரு ஆட்டத்தை ஆடுவாராம்.
அதாவது அந்த கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் யார் சுப்மன் கில்லை அவுட்டாக்குகிறார்களோ, அவர்களுக்கு சுப்மன் கில் தந்தை ரூ.100 அளிப்பார். இதனால் சுப்மன் கில் தொடர்ச்சியாக நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் விளையாட தொடங்கி இருக்கிறார். இதன் பின் மொகாலி சென்ற அவரின் குடும்பம், சுப்மன் கில்லை கிரிக்கெட் அகாடமி ஒன்றில் சேர்த்திருக்கிறது.
தந்தையின் உழைப்பு
சுப்மன் கில்லின் கவனம் கிரிக்கெட்டை கடந்து வேறு எங்கும் சென்றுவிடக் கூடாது என்பதில் அவரின் தந்தை தீவிரமாக இருந்துள்ளார். மருத்துவ செலவு, உணவு, பயிற்சி செலவு என்று ஏராளமான பணத் தேவை வந்து அழுத்தம் ஏற்பட்ட போதும், சுப்மன் கில் தந்தை அசரவில்லை. அந்த நேரத்தில் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில வீரர்கள் உதவி செய்திருக்கின்றனர்.
காலை 3.30 மணிக்கு எழுந்து 4 மணிக்கு சுப்மன் கில் அகாடமியில் இருப்பாராம். அன்றைய நாள் முழுவதும் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட பின், மாலையில் தான் வீடு திரும்புவார். அதன்பின் தந்தையுடன் சேர்ந்து மாலையில் பயிற்சிக்கு செல்வார். அப்போது சுப்மன் கில்லின் பயிற்சியை தந்தையும் தீவிரமாக கவனிப்பார் என்று தெரிய வந்துள்ளது. இதனால் சுப்மன் கில்லின் தந்தையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

