சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதும் நடப்பு போட்டியில் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இச்சூழலில், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி அணியில் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ததை குறித்து பாராட்டியுள்ளார்.
ஸ்பின்னர்கள் அதிகமாக இருப்பது தான் இந்திய அணியின் பலம்:
செய்தியாளர்கள் இந்திய அணியின் அதிக ஸ்பின்னர்களைக் கொண்ட அமைப்பைப் பற்றி இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது; “சாம்பியன்ஸ் ட்ராபிக்காக இந்திய அணியில் இரண்டு ஸ்பின்னர்கள் உள்ளனர் (வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ்), மற்ற மூவரும் ஆல்-ரவுண்டர்களாக உள்ளனர் (ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர்). எனவே நான் அவர்களை ஐந்து ஸ்பின்னர்கள் எனப் பார்க்கவில்லை. ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரும் பேட்டிங் செய்யவும், பந்துவீசவும் முடியும்.
ஆனால் மற்ற அணிகளில், வேகப்பந்துவீச்சாளர்கள் தான் ஆல்-ரவுண்டர்களாக உள்ளனர், அதனால் அவர்கள் ஆறு வேகப்பந்துவீச்சாளர்களை எடுத்துள்ளனர், இது அவர்கள் அணிக்கு நல்லது. ஆனால், நாங்கள் நம்முடைய பலமான ஸ்பின்னர்களை பயன்படுத்தி விளையாடுகிறோம்,”
இடத்திற்கு ஏற்றவாறு விளையாடுவார்கள்:
“நாங்கள் அதற்கு ஸ்விங் ஆகும் இடத்திற்கு ஏற்றவாறு விளையாடக் கூடிய திறனை கொண்டுள்ளோம். அந்த நேரத்தில், பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை நன்கு அறிவார்கள்.
கிரிக்கெட் விளையாட்டு என்பது 7-8 பேட்ஸ்மேன்கள் அனைவரும் பங்களிப்பதையேப் பொறுத்தது. பெரிய ஸ்கோர் எடுக்க முடியாது என்றாலும், அந்த 7-8 பேர் ஒரு அணியாக பங்கு பெற வேண்டும்.” என்று கூறி முடித்தார்.

