இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி மெல்போர்ன் நகரில் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுன்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக மாற்று வீரராக மும்பை அணியின் ஆல் ரவுண்டர் மற்றும் ஆஃப் ஸ்பின்னரான தனுஷ் கோட்டியான் தேர்வு செய்யப்பட்டதாக பிசிசிஐ தேர்வு குழு அறிவித்தது. இந்நிலையில் இந்திய அணியின் மூத்த ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இருக்கும்போது தனுஷ் கோட்டியான் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறித்த சர்ச்சை எழுந்தது.
இந்த சூழலில் சர்ச்சைகளுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் நகைச்சுவையாக குல்தீப் யாதவிற்கு விசா இல்லை என்று கூறினார். மேலும் தனுஷ் கோட்டியான் தேர்வு செய்யப்பட்டதற்கான விளக்கத்தையும் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் ரோஹித் சர்மா. கடந்த சில ஆண்டுகளாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் தனுஷ் கோட்டியான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய ரோஹித் சர்மா, “தனுஷ் கோட்டியான் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்திய ஏ அணியுடன் ஆஸ்திரேலியாவில் விளையாடி இருக்கிறார். மேலும் கடந்த 2 வருடங்களாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய அனுபவம் இந்திய அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். நடைபெற இருக்கும் சிட்னி மற்றும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகளில் 2 சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் பேக் அப் வீரராக தனுஷ் இருப்பார்” என கூறினார்.
மேலும் விரிவாக பேசிய ரோஹித் சர்மா “குல்தீப் யாதவ் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருக்கிறார். அவர் கிரிக்கெட் விளையாடுவதற்கான முழு உடல் தகுதியில் இல்லை. இதனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை எனக் கூறினார். மேலும் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான அக்சர் பட்டேலுக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவரால் ஆஸ்திரேலியா பயணம் மேற்கொள்ள இயலவில்லை. இதன் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டி மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தனுஷ் கோட்டியானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
26 வயதான தனுஷ் கோட்டியான் மும்பை அணிக்காக 44 ரஞ்சி போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவற்றில் 101 விக்கெட் வீழ்த்தி இருப்பதோடு 1525 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 13 அரை சதங்களும் 2 சதங்களும் அடங்கும்.மும்பை அணி கடந்த வருடம் ரஞ்சி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு தனுஷ் கோட்டியான் முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் கடந்த வருடத்தில் அவர் ரஞ்சி கோப்பை போட்டிகளில் தொடர் நாயகன் விருது வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

