நியூசிலாந்த அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இந்தியாவில் முதல்முறையாக தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. மறுபுறம் இந்தியா 12 ஆண்டுகளில் முதல் தடவையாக டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்துள்ளது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தோல்விக்கு பின் ரோகித் சர்மாவின் பேட்டி இந்திய ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.
முன்னதாக கடந்த 24ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா 156 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகி அதிர்ச்சியளித்தது. இதன் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி 255 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு 359 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்தியா 245 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தத் தோல்வியின் மூலம் 12 வருடங்களாக சொந்த மண்ணில் கட்டி காத்து வந்த ஆதிக்கத்தை இந்திய அணி இழந்திருக்கிறது. இந்தியா கடைசியாக 2012 ஆம் வருடம் தோனி தலைமையில் இங்கிலாந்து அணியுடன் தொடரை இழந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்று சொந்த மண்ணில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வந்தது. இந்நிலையில் தற்போது நியூசிலாந்து அணியுடன் ஆன தோல்வி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்தத் தோல்வியை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியுடன் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஐசிசி வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் கோபத்திலும் அதிருப்தியிலும் இருக்கும் நிலையில் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டி ரசிகர்களை மேலும் கோபமடைய செய்திருக்கிறது. இன்றைய போட்டிக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோஹித் சர்மா 12 வருடங்களில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறோம். 12 வருடங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால் ஒரு தொடரில் தோல்வி அடைவது அனுமதிக்கப்பட்டது எனக் கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் கடந்த 12 வருடங்களில் இது போன்ற தோல்விகளை அடிக்கடி சந்தித்து இருந்தால் 18 டெஸ்ட் தொடர்களை வென்றிருக்க முடியாது. இந்திய அணி சிறப்பான ஆட்டத்தையே கடந்த காலங்களில் வெளிப்படுத்தி வந்தது. இந்த ஒரு தொடரில் மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறோம். எனினும் இந்த தோல்வியிலிருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம் எனக் கூறினார். ரோகித் சர்மாவின் தோல்வி பற்றிய கருத்து ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரது கருத்துக்கு பின்னூட்டம் இட்ட ரசிகர்கள் ரோகித் சர்மா தரவுகளை சரியாக படித்து பார்த்துவிட்டு தோல்விக்கான காரணத்தை கூற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் தவறான ஸ்டேட்மெண்ட்களை கொடுக்க வேண்டாம் எனவும் அவர்கள் ரோகித் சர்மாவை திட்டி இருக்கின்றனர். இது தொடர்பாக பதிவு செய்த ஒரு ரசிகர் இந்தியா சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. இந்திய அணியின் தோல்விகளையும் மறைக்க ரோகித் சர்மா பூசி முழுக வேண்டாம் என தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக பதிவு செய்த மற்றொரு ரசிகர் தோல்வியை நினைத்து கொஞ்சமாவது வெட்கப்படுங்கள் என பதிவு செய்திருக்கிறார்.
கடந்த காலங்களில் டெஸ்ட் தொடர்களில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியை தழுவினாலும் டெஸ்ட் போட்டி தொடரை வெற்றி பெற்றது. அதேபோல் தற்போது நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தாலும் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவோம் என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். இந்நிலையில் இரண்டாவது போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்து தொடரை இழந்திருப்பது ரசிகர்களை விரக்தியிலும் கோபத்திலும் ஆழ்த்தி இருக்கிறது.

