ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி ( 2024-25 ) தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய அணியானது 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. எனவே ஐந்தாவது டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டியது கட்டாயம் என்று சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியானது 185 ரன்களிலே ஆல் அவுட் ஆனது.
அதன்பின் ஆஸ்திரேலியா அணி தரப்பில் சாம் கான்ஸ்டஸ் மற்றும் உஸ்மான் கவாஜா கூட்டணி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்க, பும்ரா வீசிய முதல் பந்திலேயே இறங்கி வந்து சாம் கான்ஸ்டஸ் பவுண்டரி அடித்து பும்ராவே சீண்டி இருந்தார்.
அதன் பிறகு மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தை வீசுவதற்காக ஓடும் பொழுது, கவாஜா பேட்டிங் செய்ய தயாராகாமல் நின்று கொண்டிருந்தார். இதனால் விரத்தி அடைந்த பும்ரா ‘என்ன இது’ என்று இரு கைகளையும் உயர்த்தி செய்கை காட்ட, மறுபுறத்தில் இருந்த சாம் கான்ஸ்டஸ், பும்ராவுடன் வாய் தகராற்றில் ஈடுபட்டார். உடனே, நடுவர்கள் தலையிட்டு வீரர்களைப் பிரித்தனர். இதனால் ஆக்ரோஷம் அடைந்த பும்ரா அன்றைய கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவின் விக்கெட் வீழ்த்தி, சாம் கான்ஸ்டானுக்கு தான் யார் என்பதை நிரூபித்தார். இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி நாள் முடிவில் 9 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து களத்தில் இருக்கிறது.
இந்த சம்பவத்தை குறித்து ரிஷப் பந்த், அவர்கள் நேரத்தை வீணடிப்பதற்காகவே இப்படி செய்தார்கள் என கூறியிருந்தார்.
நாங்கள் இன்னொரு ஓவரை வீசக்கூடாது என்பதற்காக தான் சண்டை:
“எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், அவர்கள் சிறிய வாய் தகராற்றில் ஈடுபட்டு, சில நேரத்தை வீணடிக்க விரும்பினார்கள். அதற்காகத் தான் சாம் கான்ஸ்டாஸ் ஜஸ்பிரீத் பும்ராவுடன் உரையாடினார். அவர் ஏதோ சொன்னார்; அது எனக்கு கேட்கவில்லை. ஆனால், அவர்களின் எண்ணம் என்னவாயிருந்தது என்றால், நாங்கள் இன்னொரு ஓவரை வீசாதபடி நேரத்தை வீணடிப்பது தான்.” என்று ரிஷப் பந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.

