ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து விலகி ஆர்சிபி அணியில் இணைய இருந்ததாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலானது. மேலும் ரிஷப் பண்ட் பெங்களூர் அணியில் இணைய இருந்ததை விராட் கோலி விரும்பவில்லை. இதன் காரணமாக ரிஷப் பண்ட் பெங்களூர் அணிக்கு விளையாட இருந்த வாய்ப்பு பறிக்கப்பட்டது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிலளித்திருக்கும் ரிஷப் பண்ட் அடிப்படை உண்மை இல்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என பொய் செய்திகளை பரப்பியவர்களுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனுமான ரிஷப் பண்ட் 2022 ஆம் வருடம் ஏற்பட்ட கார் விபத்திற்கு பிறகு இந்த வருட ஐபிஎல் தொடரில் மீண்டும் களம் இறங்கினார். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என 2 துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியதோடு தனது உடற் தகுதியையும் நிரூபித்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இந்திய அணியிலும் இடம்பெற்றார். தற்போது பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
2016 ஆம் வருடம் முதல் டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் 2021 ஆம் வருடம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை கேப்டனாக நியமித்தது. பேட்டிங் மற்றும் கேப்டன் என 2 பொறுப்புகளிலும் டெல்லி அணிக்கு சிறப்பான பங்களிப்பை பண்ட் வழங்கி வந்தார். தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களை தக்க வைப்பதற்கான தேதியை பிசிசிஐ அறிவித்திருக்கிறது. இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகள் தங்கள் அணியின் முன்னணி வீரர்களை தக்க வைப்பதற்காக திட்டங்கள் தீட்டி வருகிறது.
மேலும் டெல்லி அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்டை அந்த அணியில் இருந்து விடுவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் ரிஷப் பண்ட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைய இருப்பதாக வதந்தி பரவியது. மேலும் பெங்களூர் அணியில் கேப்டனாக இருக்கும் ஃபாஃப் டு பிளெசிஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதில் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட இருப்பதாகவும் பொய்யான செய்திகள் பரவின.
மேலும் பெங்களூர் அணிக்கு ரிஷப் பண்ட் வருவதை விராட் கோலி விரும்பவில்லை என்றும் பண்ட் இந்திய அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணியில் செய்யும் அரசியல் விராட் கோலிக்கு பிடிக்காததால் பண்ட் ஆர்சிபி அணியில் விளையாட இருந்ததை தடுத்ததாகவும் வதந்திகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தவறான தகவல்கள் குறித்து ரிஷப் பண்ட் என்ன நினைக்கிறார்.? என்பது தொடர்பாக கிரிக்கெட் ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் அவரிடம் கேள்வி கேட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்த பண்ட் நம்பிக்கை இல்லாத சூழ்நிலையை எப்போதும் உருவாக்க நினைக்காதீர்கள். வதந்திகள் பரவுவது இது முதல் முறை அல்ல. மேலும் பொய்யான செய்திகள் இதோடு முடிந்து விடுவதுமில்லை. ஆனாலும் தற்போது பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர் ஒரு செய்திகளை பதியும் முன் அவை உண்மையா.? என்பதை யோசித்து பதிவிடுங்கள்.
இதுபோன்ற வதந்திகள் பரவி அமைதியை கெடுப்பது ஒவ்வொரு நாளும் மோசமாகிக் கொண்டே வருகிறது. மற்றது எல்லாம் உங்கள் கையில் தான் இருக்கிறது. என்னுடைய பதில் இந்த பொய்யான செய்தியை பகிர்ந்தவருக்கு மட்டும் இல்லை. இது அனைவருக்கும் ஆன பதில். தயவுசெய்து பொய்யான செய்திகளையும் வதந்திகளையும் பரப்பாதீர்கள் என தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

