ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது. ஆர்சிபி அணி சார்பாக புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டை வீழ்த்தி சாதித்தார்.
இதன்பின் ஆர்சிபி அணிக்காக விராட் கோலி – ஜேகப் இணை தொடக்கம் கொடுத்தது. அதிரடியாக ஆடிய ஜேகப் பெத்தல் 12 ரன்களில் அக்சர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பின் வந்த படிக்கல் அதே ஓவரில் போல்டாகி வெளியேற, தொடர்ந்து வந்த கேப்டன் பட்டிதர் 6 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேரினார். இதனால் ஆர்சிபி அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
விராட் கோலி நிதானம்
இதன்பின் ஆர்சிபி அணியின் குர்ணால் பாண்டியா களமிறக்கப்பட்டார். அவரும், விராட் கோலியும் இணைந்து விக்கெட் கொடுக்க கூடாது என்று நிதானமாக ரன்களை சேர்த்தனர். டெல்லி அணி தரப்பில் ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வர, கொஞ்சம் கூட நிதானம் இழக்கவில்லை. ஓவருக்கு 6 ரன்கள் எடுப்பதே இருவரின் இலக்காக இருந்தது. இதனால் 10 ஓவர்களில் ஆர்சிபி ஸ்கோர் 64 ரன்களை சேர்த்திருந்தது.
தொடர்ந்து சமீரா வீசிய 11வது ஓவரில் குர்ணால் பாண்டியா அபாரமாக ஒரு சிக்சரை அடிக்க, பின் முகேஷ் குமார் பந்தில் அடுத்தடுத்து 2 சிக்சரை விளாசினார். இதனால் ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் கைகள் ஓங்கியது. அதுமட்டுமல்லாமல் குல்தீப் யாதவ் பந்திலும் ஒரு சிக்சரை அடிக்க, ஆர்சிபி அணி 15 ஓவர்கள் முடிவில் 114 ரன்களை எடுத்தது. சிறப்பாக ஆடிய குர்ணால் பாண்டியா 38 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
ஆர்சிபி சாதனை
இன்னொரு பக்கம் நிதானமாக ஆடிய விரார் கோலி 45 பந்துகளில் அரைசதம் கடக்க, ஆர்சிபி அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. இதன்பின் குர்ணால் பாண்டியா அதிரடியாக பவுண்டரிகளை விளாச தொடங்கினார். ஆர்சிபி அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட போது, விராட் கோலி 51 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் டிம் டேவிட் களமிறக்கப்பட்டார்.
அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே டிம் டேவிட் சிக்ஸ் அடிக்க, 2வது பந்து பவுண்டரிக்கு பறக்க, ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன் மூலமாக டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

