ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. அபாரமாக ஆடிய கேப்டன் ரஜத் பட்டிதர் 32 பந்துகளில் 51 ரன்களை விளாசி தள்ளினார்.
சிஎஸ்கே ஏமாற்றம்
சிஎஸ்கே அணி தரப்பில் நூர் அஹ்மது 3 விக்கெட்டை வீழ்த்தினார். இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. தொடக்க வீரர் ராகுல் திரிப்பாட்டி 5 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, பின் வந்த கேப்டன் ருதுராஜ் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் சிஎஸ்கே அணி 8 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா – தீபக் ஹூடா களத்தில் இருந்தனர். தீபக் ஹூடா அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, 9 பந்துகளில் 4 ரன்களில் வெளியேற, பின் வந்த சாம் கரண் 13 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டது.
ரன் ரேட்டில் கவனம்
அதிகம் நம்பியிருந்த ரச்சின் ரவீந்திரா – சிவம் துபே சிறிது நேரம் போராடிய சூழலில், ரச்சின் 41 ரன்களிலும், துபே 15 பந்துகளில் 19 ரன்களிலும் யாஷ் தயாள் வீசிய ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். இதனால் 13 ஓவர்களில் சிஎஸ்கே அணி 80 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்ததால், கிட்டத்தட்ட தோல்வி உறுதி செய்யப்பட்டது.
இதன்பின் வந்த அஸ்வின் 11 ரன்களில் ஆட்டமிழக்க, தோனி களம் வந்தார். அப்போதே சிஎஸ்கே அணி ரன் ரேட்டை சரியவிடாமல் விளையாட தொடங்கியது. இறுதியாக தோனி 2 சிக்சர்களை அடிக்க, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து, 50 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.

