ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்களை விளாசியது. விராட் கோலி 67 ரன்களையும், ரஜத் பட்டிதர் 64 ரன்களையும் விளாசினர். இதன்பின் மும்பை அணிக்காக ரோகித் சர்மா – ரிக்கல்டன் இணை தொடக்கம் கொடுத்தது.
ரோகித் சர்மா சோகம்
அதிரடியாக தொடங்கிய ரோகித் சர்மா 2வது ஓவரை வீசிய யாஷ் தயாள் பவுலிங்கில் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வில் ஜாக்ஸ் – ரிக்கல்டன் இருவரும் நிதானமாக ஆடிய நிலையில், ரிக்கல்டன் 17 ரன்களில் பெவிலியன் சென்றார். பின்னர் வந்த சூர்யகுமார் – வில் ஜாக்ஸ் கூட்டணி விரைவாக ரன்களை சேர்த்தது.
அப்போது க்ருனால் பாண்டியா வீசிய பவுன்சர் பந்தில் வில் ஜாக்ஸ் சிக்ஸ் அடிக்க முயன்று 22 ரன்களில் வெளியேறினார். இதன்பின் திலக் வர்மா – சூர்யகுமார் யாதவ் கூட்டணி அபாரமாக ஆடி ரன்களை விளாசியது. ஆனால் சூர்யகுமார் யாதவ் பவுண்டரி அடிக்க முடியாமல் தடுமாற, அவர் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா சூறாவளியால் பொளந்து கட்டினார்.
ஹர்திக் பாண்டியா வெறித்தனம்
அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி விளாசி தள்ள, 15 ஓவர்களில் மும்பை அணியின் ஸ்கோர் 157 ரன்களாக உயர்ந்தது. கடைசி நேரத்தில் திலக் வர்மாவும் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் அரைசதம் விளாசி தள்ளினார். கடைசி 2 ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவையாக இருந்தது. ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரின் முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அந்த ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசி க்ருனால் பாண்டியா வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் சான்ட்னர் 8 ரன்களில் ஆட்டமிழக்க, 2வது பந்தில் தீபக் சஹர் டக் அவுட்டாகினார். அந்த ஓவரின் 5வது பந்தில் நமன் திர் ஆட்டமிழக்க, ஆர்சிபி அணியின் வெற்றி உறுதியாகியது. இறுதியாக மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

