2025 ஆம் வருட ஐபிஎல் தொடருக்கான ஏலம் பல அணிகளின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. நீண்ட நாட்களாக ஒரே அணியில் விளையாடி வந்த வீரர்கள் வர இருக்கின்ற ஐபிஎல் தொடரில் வேறு அணிகளுக்காக விளையாட இருக்கிறார்கள். இதே போல் கடந்த 2018 ஆம் வருடம் முதல் ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த முகமது சிராஜ் வர இருக்கின்ற ஐபிஎல் தொடருக்கு முன்பாக பெங்களூர் அணியால் ரிலீஸ் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி முகமது சிராஜை ஆர்சிபி அணி மீண்டும் தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அந்த அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனைத் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி 12.75 கோடி ரூபாய்க்கு முகமது சிராஜை ஏலத்தில் எடுத்தது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
2017 ஆம் வருடம் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அறிமுகமான முகமது சிராஜ் அந்தத் தொடரில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து 2018 ஆம் வருட ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 7 வருடங்களாக பெங்களூர் அணிக்காக விளையாடி வந்தார் முகமது சிராஜ். மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரருமான விராட் கோலியின் ஆதரவும் முகமது சிராஜிற்கு இருந்தது.
மேலும் ஆர்சிபி அணியில் விளையாடிய போது இந்திய டெஸ்ட் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட சிராஜ் தனது திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலும் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக இடம் பெற்று வருகிறார். இந்நிலையில் 2025 ஆம் வருட ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக முகமது சிராஜை பெங்களூர் அணி நிர்வாகம் ரிலீஸ் செய்தது. இதனைத் தொடர்ந்து 7 வருடங்களுக்குப் பிறகு ஏலத்தில் கலந்து கொண்ட சிராஜ், குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் ஆர்சிபி அணி நிர்வாகம் மற்றும் ஆர்சிபி ரசிகர்களுக்காக தனது இதயத்திலிருந்து உணர்வுபூர்வமான பதிவை சமூக வலைதளங்களில் முகமது சிராஜ் பகிர்ந்து இருக்கிறார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அவர் எனது அன்பான ஆர்சிபி அணிக்கு என தனது பதிவை தொடங்கி இருக்கிறார். மேலும் இந்தப் பதிவில் ஆர்சிபி அணியுடன் பயணித்த 7 வருடங்களும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவை என குறிப்பிட்டிருக்கிறார்.
ஆர்சிபி அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடிய நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய இதயம் நன்றி உணர்வாலும் அன்பாலும் உணர்ச்சிகளாலும் நிரம்பி இருக்கிறது. வெற்றி மற்றும் தோல்வியை தாண்டி நீங்கள் அளித்த ஆதரவு என்றும் மறக்க முடியாதது.வார்த்தைகளால் விவரிக்க முடியாத தோல்வியின் வலி சூழ்ந்திருந்த நேரங்களிலும் உங்களின் ஆதரவான வார்த்தைகள் எங்களுக்கு உத்வேகத்தை அளிப்பதாக இருந்தது. ஆர்சிபி என்பது ஒரு அணி நிர்வாகம் மட்டுமல்ல. அது ஒரு இதயத்துடிப்பு. ஒரே குடும்பத்தை போன்ற ஒரு உணர்வு என உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார் முஹம்மது சிராஜ்.
மேலும் ஆர்சிபி ரசிகர்கள் குறித்து தனது பதிவில் குறிப்பிட்டிருக்கும் சிராஜ் அணியின் உயிர் நாடியே ரசிகர்கள் தான் என தெரிவித்திருக்கிறார். மேலும் ரசிகர்கள் தொடர்பாக பதிவு செய்துள்ள அவர் அணிக்காக நீங்கள் கொடுக்கும் எனர்ஜி எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு மற்றும் நம்பிக்கை இவற்றை ஈடு செய்வதற்கு இந்த உலகில் எதுவும் இல்லை என உருக்கமாக பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு முறை ஆர்சிபி அணிக்காக விளையாடச் செல்லும் போதும் உங்களது கனவுகளின் பாரத்தையும் சுமந்தே செல்கிறேன். மைதானங்களின் இருக்கைகளில் இருந்து நீங்கள் கொடுக்கும் சக்தி மற்றும் ஆதரவு எங்களை எப்போதும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது.
நாங்கள் தோல்வியடைந்த போது கண்ணீர் விட்டு அழுதீர்கள். நாம் வெற்றி பெற்ற போது கொண்டாடினீர்கள். அணியின் வெற்றி மற்றும் தோல்விகளின் போதும் எங்களுடன் இருந்தீர்கள். இந்த உலகிலேயே சிறந்த ரசிகர்கள் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் தான் என உறுதியாக சொல்வேன் எனவும் பதிவு செய்துள்ளார். மேலும் நான் புதிய அணிக்கு சென்றாலும் என் இதயத்தின் ஒரு பகுதி எப்போதும் ஆர்சிபி அணியின் வசம் இருக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இது பிரியாவிடை பதிவல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர் இது நன்றி தெரிவிக்கும் பதிவு என தெரிவித்துள்ளார். மேலும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கும் என்னை ஏற்றுக் கொண்டதற்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ள முகமது சிராஜ். ஆர்சிபி அணியுடனான பந்தம் கிரிக்கெட்டிற்கு அப்பாற்பட்ட மகத்துவமானது எனவும் உருக்கமுடன் பதிவு செய்துள்ளார்.

