ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது.
ரஜத் பட்டிதர் பேட்டி
இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலமாக ஆர்சிபி அணி 3வது தோல்வியை சந்தித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் தொடர்ந்து 3வது முறையாக ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த சீசனில் சொந்த மண்ணில் இன்னும் ஒரு போட்டியில் கூட வெல்லாத அணி ஆர்சிபி மட்டும்தான். இதனால் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
இந்த தோல்வி பற்றி ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதர் பேசும் போது, இந்த பிட்ச் அதிக நேரம் மூடி வைக்கப்பட்டிருந்தால், பஞ்சாப் பவுலிங்கின் போது நன்றாக பந்து நின்று வந்தது. ஆனால் ஒரு பேட்டிங் யூனிட்டாக இணைந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். இந்த பிட்ச்களில் பார்ட்னர்ஷிப்களை உருவாக்குவது முக்கியம்.
ஆர்சிபி பேட்ஸ்மேன்கள்
ஆனால் ஆர்சிபி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்த தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது. தேவ்தத் படிக்கலை விளையாட வைக்காததற்கு பிட்ச் மட்டுமே காரணம். மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த பிட்ச் அவ்வளவு மோசமானதாக இருக்கவில்லை. அதனால் பஞ்சாப் பவுலர்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
விக்கெட் எப்படி இருந்தாலும், நாங்கள் நன்றாக பேட்டிங் செய்து வெற்றி இலக்கை பெற வேண்டும். அதேபோல் பவுலிங் யூனிட் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பேட்ஸ்மேன்கள் தேவைக்கேற்ப விளையாடுகிறார்கள். அதனால் தவறு சொல்ல முடியாது. ஆனால் பேட்டிங் யூனிட்டாக தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

