ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் நிறைவு செய்துள்ளது. இருந்தாலும் அடுத்த சீசனுக்கான அணியை சிஎஸ்கே கட்டமைத்துவிட்ட சூழலில், ரவிச்சந்திரன் அஸ்வினின் யூட்யூப் சேனலுக்கு ரவீந்திர ஜடேஜா அளித்துள்ள பேட்டி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. இதில் சிஎஸ்கே அணியுடனான பந்தம், தோனி கேப்டன்சி, டெஸ்ட் கிரிக்கெட் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
அதில், 2022ம் ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பேற்றேன். ஆனால் சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்படவில்லை. அது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்தும் முக்கியம். மிகவும் வேகமாக மாறக் கூடிய ஆட்டம் அது. என்னை பொறுத்தவரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்தது ஒரு அனுபவம். நான் இன்னும் நன்றாக செயல்பட்டிருக்கலாம். என்று தோன்றும்.
ஆனால் ஒரு அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால், அந்த தவறும், விமர்சனமும் கேப்டன் மீதுதான் விழும். அந்த சீசனில் பவுலிங் மாற்றங்கள், ஃபீல்டிங் மாற்றங்கள் செய்து பார்த்தேன். ஆனாலும் தோல்வியே பதிலாக கிடைத்தது. ஒரு அணியின் வெற்றிக்கு அனைவரின் பங்களிப்பும் அவசியம். அதில் எந்த ராக்கெட் சயின்ஸும் கிடையாது. சில நேரங்கள் அது இயல்பாகவே நடக்கும்.
சிஎஸ்கே கேப்டன்சி அனுபவம்
ஆனால் வீரர்கள், பேட்ஸ்மேன்கள், பவுலர்களின் பங்களிப்பு இல்லாமல் டி20 கிரிக்கெட்டில் வெல்ல முடியாது. இப்போது சிந்தித்து பார்த்தால், சில விஷயங்களை வேறு மாதிரி செய்திருக்கலாம் என்று தோன்றும். டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் ஆர்டரை கூட மாற்ற வேண்டிய சூழல் வரும். இந்திய அணிக்காக ஏராளமான கேப்டன்களுக்கு கீழ் விளையாடி இருக்கிறேன். ஒவ்வொரு கேப்டனின் மனநிலையையும் நன்றாக அறிவேன்.
தோனிக்கு கீழ் 3 வகையான போட்டிகளிலும் விளையாடி இருக்கிறேன். அவர் எப்போதும் எளிமையான திட்டங்களை வைத்து கொள்வார். எங்கெல்லாம் ஃபீல்டர் இல்லையோ, அங்கு ஒரு ஃபீல்ட்ரை நிறுத்துவார். டெஸ்ட் கிரிக்கெட் அப்படிதான் இயங்கும் என்பதை புரிந்து கொண்டேன். அதேபோல் டெஸ்ட் கேப்டன்சி மிகவும் வித்தியாசமானது.
டெஸ்ட் கேப்டன்சி
ஆனால் டி20 கேப்டன்சி வேறு விதமானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அழுத்தம் இருக்காது. பேட்டிங் ஆர்டரையோ, இடது – வலது பேட்ஸ்மேன்களை கொண்டு வரத் தேவையில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்சியை தவிர அனைத்தையும் சாதித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இந்திய அணியை டெஸ்டில் வழிநடத்துவது மிகப்பெரிய விஷயம். அதனை எட்ட விருப்பம் உள்ளது.
தோனியை அருகில் இருந்து அதிகமாக பார்த்துள்ளேன். அவர் ஒருநாளும் சொந்த சாதனைகளை பற்றி பேசியதே கிடையாது. அவரின் எண்ணம் முழுக்க மற்ற 10 வீரர்களை பற்றியதாகவே இருக்கும். நானும் இப்போது மற்ற வீரர்களிடம் இருந்து எப்படி ஆட்டத்தை வெளிப்படுத்த வைக்க முடியும் என்று சிந்திக்க தொடங்கிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

