தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் உலகின் தலைசிறந்த களத்தடுப்பாளராக அறியப்பட்டவர் ஜான்டி ரோட்ஸ். இவர் ஐபிஎல் தொடர்களிலும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போன்ற அணிகளின் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ப்ரோ கிரிக்கெட் பிராண்ட் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜான்டி ரோட்ஸ் சமீபத்தில் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா உலகின் தலைசிறந்த ஃபீல்டர் என குறிப்பிட்டு இருக்கிறார்.
கிரிக்கெட் உலகில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மூலம் பல்வேறு வீரர்களும் உலக அளவில் பெயர் பெற்ற நிலையில் 1992 ஆம் வருட உலகக் கோப்பை போட்டிகளின் போது தனது ஃபீல்டிங் திறமையால் உலகப் புகழ் பெற்றவர் ஜான்டி ரோட்ஸ். மேலும் கிரிக்கெட் வரலாற்றில் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆட்டநாயகன் விருது பெற்றவரும் ஜாண்டி ரோட்ஸ் மட்டுமே. இத்தனை புகழுக்குரிய ஜான்டி ரோட்ஸ் இந்திய வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் உலகின் தலைசிறந்த ஃபீல்டர்கள் என பாராட்டி இருக்கிறார்.
இது தொடர்பாக புரோ கிரிக்கெட் லீக் ஜெர்சி அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ரோட்ஸ் ” இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரை நான் எப்போதும் சிறந்த ஃபீல்டர்களாக பார்க்கிறேன் என தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உலகின் தலைசிறந்த ஃபீல்டராக திகழ்வதாகவும் ஜான்டி ரோட்ஸ் பாராட்டி இருக்கிறார். தற்போதைய மாடர்ன் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா தான் உலகின் மிகச் சிறந்த ஃபீல்டர் என ரோட்ஸ் பாராட்டி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ரவீந்திர ஜடேஜாவை உலகின் மிகச் சிறந்த ஃபீல்டர் என நான் குறிப்பிடுவதற்கு காரணம் அவரால் மைதானத்தின் எந்த ஃபீல்டிங் பொசிஷனிலும் சிறப்பாக செயல்பட முடியும் என குறிப்பிட்டு இருக்கிறார். லாங்ஆன், மிட் விக்கெட் ஷாட் கவர் என எந்த பொசிஷனில் ஜடேஜாவை நிறுத்தினாலும் அவர் சிறப்பாக ஃபீல்டிங் செய்வார் என ரோட்ஸ் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட்டில் சிறந்த ஃபீல்டிங் என்பது பந்தை பிடிப்பது மற்றும் கேட்ச் பிடிப்பது மட்டுமல்ல.
பந்து நம்மை நோக்கி வரும்போது எவ்வளவு விரைவாக பந்தை நோக்கி வீரர் வருகிறார் என்பதுதான். தற்போதைய கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜாவை விட மிக விரைவாக ஃபீல்டிங் செய்யக்கூடிய வீரரை நான் பார்த்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். ரவீந்திர ஜடேஜாவின் கைகளில் பந்து தஞ்சம் அடைந்தால் ரன்கள் எடுப்பதற்கு வீரர்கள் அச்சப்படுகிறார்கள். இதுவே அவர் சிறந்த ஃபீல்டர் என்பதற்கு மிகப்பெரிய சான்று எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
உலகின் தலைசிறந்த ஃபீல்டராக கருதப்பட்ட ஜான்டி ரோட்ஸ் சிஎஸ்கே அணியின் வீரரான ரவீந்திர ஜடேஜாவை பாராட்டி இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடந்து முடிந்த 2024 ஆம் வருட டி20 உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவிந்திர ஜடேஜா அறிவித்தார். மேலும் ஒரு நாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளின் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. வர இருக்கின்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் துலிப் டிராபி போட்டிகளுக்கான அணியிலும் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்று இருந்தார். எனினும் தற்போது அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

