இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிவம் துபேவுக்கு பதிலாக ஹர்சித்ரானா இந்திய அணிக்காக பந்து வீசினார்.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த நிகழ்வு குறித்த தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் விளையாடிய சிவம் துபே சிறப்பாக விளையாடி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் ஒரு பந்து அவரது தலையில் இருந்த ஹெல்மெட்டைத் தாக்கிய காரணத்தால் இரண்டாவது இன்னிங்ஸின் போது அவர் பந்து வீச வரவில்லை. இதனால் அவருக்கு மாற்று வீரராக ஒரு முழுமையான வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ரானா உள்ளே கொண்டுவரப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணி தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இது சர்வதேச போட்டியா? அல்லது ஐபிஎல் தொடரா? என்கிற சந்தேகத்தை தனக்கு ஏற்படுத்துவதாக சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். மேலும் சிவம் துபேவுக்கு பதிலாக நியாயமாக ரமன்தீப் சிங்தான் உள்ளே வந்திருக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அஸ்வின் விரிவாக கூறும்போது “தற்போது பார்க்கும்போது இந்த போட்டி முடிந்துவிட்டது இந்திய அணி சொந்த மண்ணில் தொடரையும் கைப்பற்றி விட்டது. நேற்று நடந்தது என்ன மாதிரியான போட்டி என்ற பார்த்தால் ஐபிஎல் தொடர் போல இருந்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். சிவம் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித்ராணா எப்படி களமிறங்கினார் என்பதுதான் இந்த விவாதத்தின் முக்கிய மையப் புள்ளியாக இருக்கிறது. நாம் சர்வதேச போட்டி என்பதை மறந்து விட்டு ஐபிஎல் தொடர் போல விளையாடிவிட்டோமா என்று தோன்றுகிறது.
இதையும் படிங்க:இந்திய அணி நேற்று செஞ்சது நியாயமா? அநியாயம் செஞ்சிருக்காங்க.. முற்றிலும் பைத்தியக்காரத்தனம் – இங்கி அலெஸ்டர் குக் பேட்டி
கடந்த காலத்தில் ஜடேஜாவுக்கு பதிலாக சஹால் உள்ளே கொண்டுவரப்பட்டார். அதுகூட ஒரு சுழல் பந்துவீச்சாளருக்கு மற்றொரு மாற்று சுழற் பந்துவீச்சாளர் என்று கருத்தில் கொள்ளலாம். ஆனால் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் காயம் அடைந்து வெளியேறினால் அவருக்கு பதிலாக எப்படி ஒரு முழுமையான பந்துவீச்சாளர் உள்ளே வர அனுமதிக்க முடியும். இந்திய அணி கோரிக்கை வைத்தாலும் நடுவர் எப்படி இதற்கு சம்மதித்தார்கள் என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது” என்று கூறியிருக்கிறார். இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது

