ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை விளாசினர். சிறப்பாக ஆடிய நிதீஷ் ராணா 36 பந்துகளில் 81 ரன்களை விளாசினார்.
ரச்சின் டக் அவுட்
சிஎஸ்கே அணி தரப்பில் நூர் அஹ்மத், பதிரானா மற்றும் கலீல் அஹ்மத் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் சிஎஸ்கே அணிக்காக ரச்சின் ரவீந்திரா – ராகுல் த்ரிப்பாட்டி இணை தொடக்கம் கொடுத்தது. இதில் ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே ரச்சின் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் ருதுராஜ் கெய்க்வாட் – ராகுல் த்ரிப்பாட்டி இணை நிதானமாக தொடங்கியது.
4 ஓவர்கள் வரை நிதானம் காத்த இருவரும், பின்னர் அதிரடிக்கு திரும்பினர். முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்த நிலையில், ஹசரங்காவை அட்டாக் செய்ய முயன்று 19 பந்துகளில் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த சிவம் துபே அதிரடியாக சிக்சரை விளாசிய போது, ரியான் பராக்கின் அபார கேட்ச் காரணமாக 18 ரன்களில் பெவிலியன் சென்றார்.
சிஎஸ்கே தோல்வி
பின்னர் வந்த விஜய் சங்கர் 9 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டம் முழுக்க ருதுராஜ் கெய்க்வாட் தலையில் விழுந்தது. ஜடேஜா நிதானமாக விளையாட, ருதுராஜ் பவுண்டரிகளை விளாசினார். சிறப்பாக போராடிய அவர் 37 பந்துகளில் அரைசதம் அடிக்க, சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் 44 பந்துகளில் 63 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் தோனி – ஜடேஜா கூட்டணி களத்தில் இருந்தது.
கடைசி 12 பந்துகளில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. கடைசி ஓவரை வீச சந்தீப் சர்மா அழைக்கப்பட்டார். முதல் பந்திலேயே தோனி 16 ரன்களில் ஆட்டமிழக்க, ஓவர்டன் களம் புகுந்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

