ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி சனிக்கிழமை தனது முதல் சதத்தை அடித்தார்.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஏராளமான இந்திய ஆதரவாளர்களின் கர்ஜனைக்கு மத்தியில், இந்திய அணியின் ஆல் ரவுண்டரான நிதீஷ் குமார் ரெட்டி நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் 172 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து, 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் சதம் என்ற மைல்கல்லை எட்டிருந்தார், ஆஸ்திரேலியாவின் 474 ரன்களுக்கு பதிலாக இந்திய அணி 354/9 எடுக்க துணை புரிந்தார்.
வாஷிங்டன் சுந்தர் உடனான இந்தக் கூட்டணி 127 ரன் எடுத்து, ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் அதிகபட்ச எட்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பின் சாதனையை முறியடிக்க 3 ரன்கள் குறைவாக இருந்தது. அவர் தனது முதல் ஆறு டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 70க்கு மேல் சராசரியாக 282 ரன்கள் எடுத்துள்ளார்.
இதற்கு முன்னதாக அவரின் செயல் திறனை குறித்து, முன்னாள் தலைமை தேர்வாளரான எம்.எஸ்.கே. பிரசாத், “நிதிஷ் குமார் ரெட்டி இந்திய அணியில் குழப்பத்தை உருவாக்குகிறார். அவர் முழுமையான பேட்டராகவும் இல்லை, நம்பகமான பந்து வீச்சாளராகவும் இல்லை, மேலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறனும் அவருக்கு இல்லை. எனவே, அவருக்குப் பதிலாக மற்றொரு வீரரை அணியில் சேர்த்தால் அவராவது இந்திய அணிக்கு அதிக பயன் அளிப்பார்,” என்று பிரசாத் விமர்சித்திருந்தார்.
அவரை முறையாக நாங்கள் தான் வளர்த்தோம்:
சனிக்கிழமை நடந்த நான்காவது டெஸ்டின், 3வது நாளில் நிதீஷ் குமார் ரெட்டி இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்ட பிறகு, பிரசாத் தனது நிலைப்பாட்டில் U-டர்ன் எடுத்துள்ளார், மேலும் அவர் கூறுகையில், “அவரை முறையாக எப்படி கிரிக்கெட் விளையாடுவது என்று சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளோம். அவர் ஒரு சீசனில் 1200 ரன்கள் மற்றும் அண்டர்-16 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 400 ரன்கள் எடுத்தார்…. பின்னர் அவர் பந்து வீச்சில் பணியாற்றினார், இப்போது அவர் ஒரு ஆல்-ரவுண்டராக பங்களிக்கிறார். மேலும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவிற்காக ஆல்-ரவுண்டராக சிறப்பாக பங்களித்து வருகிறார்.”என்று கூறியுள்ளார்.
இதையும் கொஞ்சம் படிங்க: 19 வயது வீரருடன் மோதல்.. மன்னிச்சிருங்க கோலி நான் அப்படி பேசிருக்கவே கூடாது.. உங்களால அத பொறுத்துக்க முடியல.. முன்னாள் ஆஸி வீரர் பேட்டி
பிரசாத்துக்கு, நிதீஷ் குமாரின் சிறப்பான ஆட்டம் சரியான பதிலடியாக அமைந்தது. ரசிகர்களும் இளம் வீரரின் பின்னால் திரண்டு பிரசாத்தின் இரு நிலையான கருத்தை குறித்து விமர்சித்து வருகின்றனர்.

