இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே 2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்தியா ஐம்பது ஓவர்களில் 397 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்திருந்தது.
இந்திய அணியின் விராட் கோலி சிறப்பாக விளையாடி ஒரு நாள் போட்டியில் தனது ஐம்பதாவது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வரலாற்றில் அதிக சதங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். மேலும் இந்த வருடம் உலக கோப்பையில் அவர் 711 ரன்கள் எடுத்து 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
மேலும் ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்திருக்கிறார். 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் எடுத்திருந்தார். இதுதான் சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலி 711 ரன்கள் எடுத்திருப்பதன் மூலம் இந்த சாதனையையும் முறியடித்திருக்கிறார். 113 பந்துகளில் 117 ரன்கள் எடுத்த அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விலாசினார்.
இவருடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 70 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நெதர்லாந்து அணியுடன் கடந்த போட்டியிலும் இவர் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவிற்காக சதம் அடித்த வீரர்கள் என்ற சாதனையையும் படைத்திருக்கின்றனர்.
இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் தனது பாராட்டுக்களை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக பேசிய சச்சின் டெண்டுல்கர் ” உன்னை முதல் முறை நான் பார்த்தபோது இந்திய அணி வீரர்கள் விளையாட்டாக கூறியதை நினைத்து நீ என்னிடம் ஆசிர்வாதம் வாங்கினாய். அதை நினைத்து அந்த நாள் முழுவதும் சிரித்துக் கொண்டிருந்தேன். அதன்பிறகு உன்னுடைய கிரிக்கெட் திறமையாலும் கிரிக்கெட்டின் மீது நீ கொண்ட தீராத காதலாலும் என் மனதில் இடம் பெற்றாய்.
“இன்று வரும் இளம் தலைமுறை விராட் கோலியை ரோல் மாடலாக எடுத்து வருவதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்திய வீரர் ஒருவர் என்னுடைய சாதனையை முறியடித்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அதுவும் உலகக்கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் நிகழ்த்தி இருப்பது சிறப்பான ஒன்று. என்னுடைய சொந்த மைதானத்தில் வைத்தே என்னுடைய சாதனை முறியடிக்கப்பட்டது மிகச் சிறந்த தருணமாக கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய போட்டியில் ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோரின் சிறப்பான துவக்கத்தை பயன்படுத்தி இந்தியா 397 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து ஆடிவரும் நியூசிலாந்து அணி தற்போது 62 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் இழந்திருக்கிறது. இந்தப் போட்டியிலும் இதுவரை இந்திய அணியின் ஆதிக்கமே தொடர்கிறது.

