ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடியது. மழை காரணமாக தாமதமாக ஆட்டம் தொடங்கியதால், 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. பவர் பிளேவுக்கு 4 ஓவர்கள் என்றும், பவுலர்களில் 4 பேர் வரை 3 ஓவர்கள் வீசலாம் என்றும் நடுவர்கள் தரப்பில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன.
இதன்பின் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்களை சேர்த்தது. கடைசி ஓவர்களில் சிறப்பாக ஆடிய டிம் டேவிட் 26 பந்துகளில் அரைசதம் அடித்து ஆர்சிபி அணியின் மானத்தை காப்பாற்றினார்.
பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்
இதன்பின் 96 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. பிரியன்ஷ் ஆர்யா – பிரப்சிம்ரன் இணை தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரில் நிதானமாக ஆடிய போது, 2வது ஓவரில் அதிரடி காட்ட தொடங்கினர். இதன்பின் 3வது ஓவரில் புவனேஷ்வர் குமாரை அட்டாக் செய்ய முயன்று பிரப்சிம்ரன் சிங் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து ஹேசல்வுட் வீசிய ஓவரில் கூடுதல் வேகத்தில் வீசப்பட்ட பந்தில் பிரியன்ஷ் ஆர்யா 16 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் பஞ்சாப் அணி 52 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து ஜோஷ் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
நேகல் வதேரா அதிரடி
ஆனாலும் நேகல் வதேராவின் அதிரடி காரணமாக ஆர்சிபி அணியின்வெற்றிக்கு 15 பந்துகளில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது. அப்போது சஷாங்க் சிங் 1 ரன்னில் வெளியேற, ஸ்டாய்னிஸ் களம் புகுந்தார். அப்போது வதேரா அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி விளாசி பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தார். பின்னர் ஸ்டாய்னிஸ் சிக்ஸ் அடித்து ஆர்சிபி அணியை வீழ்த்தினார்.
இதன் மூலமாக ஆர்சிபி அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 3வது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலமாக பஞ்சாப் அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி அணி 3வது இடத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டுள்ளது.

