PAK vs SL..48.2 ஓவர்..345 ரன்.. பாகிஸ்தான் இலங்கை எதிராக அபார வெற்றி.. WC புள்ளி பட்டியலில் இந்திய அணி உட்பட அதிரடி மாற்றங்கள் .!

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் ஏழாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஹைதராபாத்தில் வைத்து மோதின. இந்தப் போட்டியை ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையின் கடைசி போட்டியாகும்.

- Advertisement -

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சனக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணி வீரர் குஷால் பெரேரா ரன்கள் எதுவும் எடுக்காமல் இரண்டாவது ஓவரில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த குஷால் மெண்டிஸ் மற்றும் பதும் நிசாங்க ஆகியோர் இலங்கை அணிக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடியாக 102 ரன்கள் சேர்த்த நிலையில் நிசாங்கா 51 ரன்கள் எடுத்து சதாப் கான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இவரைத் தொடர்ந்து மெண்டிசுடன் ஜோடி சேர்ந்தார் சமரவிக்ரமா இவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடியதோடு அதிரடியாகவும் விளையாடினர். இதனால் இலங்கை அணி 350 ரண்களுக்கு மேல் குவிக்கும் நிலையில் இருந்தது. சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடிய மெண்டிஸ் உலகக் கோப்பை போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மேலும் உலகக்கோப்பையில் விரைவாக சதம் எடுத்த முதல் இலங்கை வீரர் என்ற பெயரையும் பெற்றார். மிகச் சிறப்பாக விளையாடிய மெண்டிஸ் 77 பந்துகளில் 122 ரன்களுடன் ஆட்டம் இழந்தார் இதில் 14 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடங்கும்.

- Advertisement -

இவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சமரவிக்கிரமா ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சதத்தையும் உலகக்கோப்பையில் முதல் சதத்தையும் பதிவு செய்தார். அவர் 89 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 344 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசியதால் இலங்கை அணி 350 ரன்கள் தாண்டுவது கட்டுப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஹசன் அலி 4 விக்கெட்டுகளையும் ஹாரிஸ் ரவூப் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 345 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி ஆடிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் இமாம் உல் ஹக் 12 ரன்களிலும் கேப்டன் பாபர் அசாம் 10 ரன்களிலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர். இதனைத் தொடர்ந்து துவக்க வீரர் அப்துல்லா ஷபிக்குடன் இணைந்தார் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான். இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட்டுகள் இல்லாத வண்ணம் ஆடியதோடு ரன் குவிப்பையும் வேகப்படுத்தியது. இவர்களது பார்ட்னர்ஷிப்பில் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. மூன்றாவது விக்கெட் இருக்கு ஜோடியாக இவர்கள் இருவரும் 176 ரன்கள் சேர்த்தனர். மிகச் சிறப்பாக விளையாடிய அப்துல்லா ஷபிக் தனது முதல் ஒருநாள் போட்டி சதத்தை பதிவு செய்தார். ரிஸ்வான் தனது அரை சதத்தை கடந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்.10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 103 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் அப்துல்லா ஷபிக்.

- Advertisement -

அப்துல்லா ஷபிக் விக்கெட்டை தொடர்ந்து ஆட வந்த சவுத் ஷகீல் கம்பெனி கொடுக்க முகமது அலி இஸ்லாம் அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றார். சிறப்பாக விளையாடிய ரிஸ்வான் தனக்கு காலில் ஏற்பட்ட தசை பிடிப்பையும் பொருட்படுத்தாமல் அணியின் வெற்றிக்காக அபாரமாக விளையாடி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தையும் உலகக்கோப்பை போட்டிகளில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார். வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சவுத் ஷக்கீல் 31 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதனைத் தொடர்ந்து ரிஸ்வான் உடன் ஜோடி சேர்ந்த இப்திகார் அகமது அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு துணை புரிந்தார். ரிஸ்வான் மற்றும் இஸ்திகாரா அஹமது இருவரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 345 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மிகச் சிறப்பாக விளையாடிய முஹம்மது ரிஸ்வான் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்களை சேஸ் செய்த முதல் அணி என்ற சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் அயர்லாந்து அணியின் பனிரெண்டு ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து அணி கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 327 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது இதற்கு முன் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது பாகிஸ்தான் அணி முறியடித்திருக்கிறது. மேலும் உலகக் கோப்பை போட்டி தொடரில் ஒரே போட்டியில் நான்கு பேட்ஸ்மேன்கள் சதம் அடித்த சாதனையும் இந்த போட்டியில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இலங்கை அணிக்காக குஷால் மெண்டிஸ் மற்றும் சமர விக்கிரமா இருவரும் சதம் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷபிக் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் சதம் எடுத்து தங்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியலில் அதிரடி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் அணி இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்திய அணி தற்போது நான்காவது இடத்தில் இருக்கிறது. நாளை ஆப்கானிஸ்தான் அணியை அதிக ரன் ரேட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும்போது இந்தியா முதல் இடத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles