தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 35-வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பெங்களூரில் வைத்து மோதின. அரை இறுதி வாய்ப்புகளை உறுதி செய்வதற்கு இரண்டு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி என்பதால் இந்தப் போட்டி பரபரப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். துவக்க விக்கெட் ஜோடியாக கான்வே மற்றும் ரவீந்தரா இருவரும் இணைந்து 68 ரன்கள் சேர்த்த நிலையில் 35 ரன்கள் எடுத்த கான்வே ஆட்டம் இழந்ததை தொடர்ந்து ரவீந்தராவுடன் ஜோடி சேர்ந்தார் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன். இந்த இருவரும் சேர்ந்து மிகச் சிறப்பாக விளையாடி நியூசிலாந்து அணி மிகப் பெரிய ஸ்கோர் எட்டுவதற்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
இரண்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக இவர்கள் இருவரும் இணைந்து 180 ரன்கள் சேர்த்த நிலையில் சிறப்பாக ஆடிய வில்லியம்சன் 79 பந்துகளில் பத்து பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர் உடன் 95 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்தரா இந்த உலகக் கோப்பை தொடரில் தனது மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார். அவர் 94 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர்களைத் தொடர்ந்து ஆட வந்த டேரில் மிச்சல் 29 ரன்களும் சாப்மேன் 39 ரன்களும் கிளன் பிலிப்ஸ் 41 ரன்களும் எடுத்து அவுட் ஆக மிச்சல் சான்ட்னர் 17 பந்துகளில் இரண்டு சிக்ஸர்களுடன் 26 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழந்து 401 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 401 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபிக் நான்கு ரன்களில் அவுட் ஆக்கி ஏமாற்றம் அளித்தார். எனினும் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பகர் ஜமான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் இருவரும் இணைந்து அதிரடியாக ஆடினர். இவர்களது ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 400 ரன்களை எட்டிப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் 21.3 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மழை நின்றபோது போட்டி மீண்டும் தொடங்கியது. அப்போது பாகிஸ்தான் அணி 41 ஒவர்களில் 342 ரன்கள் எடுக்க வேண்டும் என்று டார்கெட் ரிவைஸ் செய்யப்பட்டது. மீண்டும் போட்டி தொடங்கியதும் பாகிஸ்தான் வீரர்கள் அதிரடியான ஆட்டத்தில் இறங்கினர். மீண்டும் மழை பெய்தால் போட்டியை தங்களுக்கு சாதகமாக மாற்றும் வண்ணம் வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக நியூசிலாந்து அணியின் லெக் ஸ்பின்னர் சோதி வீசிய ஆட்டத்தின் 25-வது ஓவரில் பாபர் அசாம் ஒரு சிக்ஸரும் பகர் ஜமான் இரண்டு சிக்ஸர்களும் விலாசினர்.
அந்த ஒரு ஓவரில் மட்டும் 20 ரன்கள் சேர்த்தது பாகிஸ்தான். இதனால் 25 ஓவர்களில் 200 ரன்கள் எட்டியது. பகர் ஜமான் 81 பந்துகளில் 11 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். மறுமுனையில் பாபர் அசாம் 63 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சருடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. அந்த நிலையில் டிஎல்எஸ் விதிகளின்படி பாகிஸ்தான் அணி 179 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் அணி 200 ரன்கள் எடுத்திருந்தது . மழை நிற்காததால் போட்டி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களது அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்திருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது பாகிஸ்தான்.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்ததால் அரை இறுதி பகுதி பெறுவதற்கான பந்தயமும் சூடு பிடித்திருக்கிறது. தற்போது ஆஸ்திரேலியா நியூசிலாந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகளுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் இந்த அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்து இங்கிலாந்து அணியும் இனி வரும் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்கு சிறிதளவு வாய்ப்புகள் இருக்கிறது. இன்றைய பாகிஸ்தான் அணியின் வெற்றி நடப்பு உலக கோப்பை தொடரை விறுவிறுப்பாக மாற்றி வைத்திருக்கிறது.

