13-வது உலகக் கோப்பை தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை நெருங்கி வரும் வேளையில் 41-வது போட்டியில் இன்று இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இலங்கை அணி ஏற்கனவே அரை இறுதி வாய்ப்புகளுக்கான தகுதியை இழந்துவிட்டாலும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் கலந்து கொள்வதற்கு இது முக்கியமான போட்டியாகும். மறுபுறம் நியூசிலாந்து அணிக்கு அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கு இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது.
பெங்களூர் மைதானம் சேசிங் செய்வதற்கு சாதகமான மைதானம் என்பதால் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை அணியினர் துவக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்தனர். அந்த அணியின் பதும் நிசாங்கா 2 ரன்னிலும் கேப்டன் குஷால் மெண்டிஸ் 6 ரன்னிலும் சமர விக்கிரமா 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும் அந்த அணியின் மற்றொரு துவக்க வீரர் குஷால் பெரேரா அதிரடியாக விளையாடி இந்த உலகக்கோப்பை தொடரில் அதிவேக அரை சதத்தை பதிவு செய்தார். சிறப்பாக விளையாடிய அவர் 28 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இவரைத் தொடர்ந்து சரித் அசலங்கா 8 ரன்னிலும் ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதன் பிறகு ஓரளவு நின்று விளையாடிய தனஞ்செயா டீ சில்வா 19 ரன்னில் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து கருணரத்னே 6 ரன்னிலும் துஷ்மந்தா சமீரா 1 ரன்னிலும் அவுட் ஆயினர். இதனால் இலங்கை 128 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. எனினும் அந்த அணியின் இறுதி விக்கெட் ஜோடி சிறப்பாக விளையாடினர்.
10-வது விக்கெட்க்கு மகேஷ் தீக்க்ஷனா மற்றும் மதுசங்காய் இருவரும் இணைந்து 43 ரன்கள் சேர்க்க இலங்கை அணி 46.4 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . சிறப்பாக விளையாடிய தீக்ஷனா 91 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ட்ரண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும் பெர்குசன் சாண்டனர் மற்றும் ரவீந்திர ஆகியோர் தலா இரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து எளிதான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் இந்தப் போட்டியில் விரைவாக வெற்றி பெற்று அவர்களது நெட் ரன் ரேட் அதிகப்படுத்த விரைவாக ஆடினர். துவக்க வீரர்கள் 12.1 ஓவர்களில் 86 ரன்கள் சேர்த்து நிலையில் அதிரடியாக விளையாடிய கான்வே 42 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருடன் களம் இறங்கிய மற்றொரு துவக்க வீரர் ரச்சின் ரவீந்தரா 34 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளுடன் 42 ரன் எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து கேன் வில்லியம்சன் 14 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
எனினும் டேரில் மிச்சல் 31 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றியை விரைவாக அடைய உதவினார். இவர் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து கிளன் பிலிப்ஸ் 17 ரன்னிலும் டாம் லேதம் 2 ரன்களும் சேர்த்த நிலையில் நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 10 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. மேலும் இந்த வெற்றி நியூசிலாந்து அணியின் அரை இறுதி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்து இருக்கிறது.
இனி இங்கிலாந்து அணி உடனான போட்டியில் பாகிஸ்தான் அணி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தான் அணியின் அரையிறுதி கனவுகளும் நியூசிலாந்தின் இந்த வெற்றியின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. இலங்கை இந்த போட்டியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபியில் பங்குபெறும் வாய்ப்பை இழந்ததாகவே தெரிகிறது .

