ஐபிஎல் தொடரில் மும்பை அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்களையும், துபே 50 ரன்களையும் சேர்த்தனர்.
ரோகித் சர்மா அட்டாக்
இதன்பின் மும்பை அணி தரப்பில் ரோகித் சர்மா – ரிக்கல்டன் இணை தொடக்கம் கொடுத்தது. இதில் ரிக்கல்டன் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரியை விளாச, ஓவர்டன் வீசிய 2வது ஓவரில் ரோகித் சர்மா சிக்சரை விளாசினார். தொடர்ந்து கலீல் அஹ்மத் வீசிய 3வது ஓவரில், ரோகித் சர்மா ஒரு சிக்ஸ், 2 பவுண்டரியை விளாசினார்.
தொடர்ந்து ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸ், பவுண்டரி என்று விளாச, மும்பை அணி 5 ஓவர்களிலேயே 56 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ரிக்கல்டன் ஜடேஜா பந்தில் 24 ரன்களில் ஆட்டமிழக்க, உடனடியாக சுர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட்டார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் அட்டாக்கை முன்னெடுக்க, ரோகித் சர்மா நிதானமாக விளையாடி அரைசதத்தை எட்டினார்.
சூர்யகுமார் யாதவ் சம்பவம்
இதனால் 10 ஓவர்களிலேயே மும்பை அணியின் ஸ்கோர் 93 ரன்களை எட்டியது. இதன்பின்னரே சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலர்களான நூர் அஹ்மத் மற்றும் பதிரானா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டனர். அவர்களையும் ரோகித் – சூர்யா இணை வெளுத்து கட்டியது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் அரைசதத்தை விளாசினார்.
இறுதியாக பதிரானா பந்தில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி சூர்யகுமார் யாதவ் மும்பை அணியை வெற்றிபெற வைத்தார். 15.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்து அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக சிஎஸ்கே அணி தனது 6வது தோல்வியை பெற்றுள்ளது. இதன் மூலமாக மும்பை அணியும் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

