ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை எதிர்த்து கொல்கத்தா அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய கேகேஆர் அணி 16.2 ஓவர்களில் 116 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன்களை சேர்த்தார்.
அஸ்வனி குமார் அசத்தல்
மும்பை அணி தரப்பில் அறிமுகமான அஸ்வனி குமார் 3 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் தீபக் சஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மும்பை அணிக்காக பவுலிங் செய்த அத்தனை வீரர்களும் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினர். இதனால் 117 ரன்கள் என்ற எளிய இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
மும்பை அணிக்காக ரோகித் சர்மா – ரிக்கல்டன் இணை தொடக்கம் கொடுத்தது. இருவரும் அதிரடியாக ரன்களை விளாசிய நிலையில், 5 ஓவர்களுக்கு மும்பை அனி 44 ரன்களை சேர்த்திருந்தது. இந்த சூழலில் ரஸல் வீசிய 6வது ஓவரில் ரோகித் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் வில் ஜாக்ஸ் – ரிக்கல்டன் இணை இணைந்தது.
ரிக்கல்டன் அதிரடி
பின்னர் அதிரடியாக ஆடிய ரிக்கல்டன் 33 பந்துகளில் அரைசதம் அடிக்க, மும்பை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதன்பின் வில் ஜாக்ஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பினன்ர் சூர்யகுமார் யாதவ் – ரிக்கல்டன் இணைந்து மும்பை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியாக மும்பை அணி 12.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது.
இதனால் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் முதல் வெற்றி இதுவாகும். வான்கடே மைதானத்தில் ஆடிய முதல் போட்டியிலேயே மும்பை அணி வெற்றியை பெற்றிருப்பது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பாக ஆடிய ரிக்கல்டன் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அசத்தினார்.

