ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே எடுத்தது. சிறப்பாக ஆடிய கிளாசன் 71 ரன்களையும், போல்ட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதன்பின் மும்பை அணிக்காக ரோகித் சர்மா – ரிக்கல்டன் இணை களமிறங்கியது. இதில் உனாத்கட் வீசிய 2வது ஓவரில் ரிக்கல்டன் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் ரோகித் சர்மா – வில் ஜாக்ஸ் கூட்டணி அதிரடியாக ரன்களை குவித்தது. குறிப்பாக ரோகித் சர்மா பவுண்டரியும், சிக்சருமாய் விளாசி தள்ளினார். கம்மின்ஸ் வீசிய 3வது ஓவரிலேயே 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 17 ரன்கள் விளாசப்பட்டது.
இதன்பின் ரோகித் சர்மா கியரை மாற்றி மைதானத்தில் 4 திசைகளிலும் வெளுத்து வாங்கினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் மும்பை அணியின் ஸ்கோர் 56 ரன்களாக உயர்ந்தது. இதன்பின் வில் ஜாக்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் களம் புகுந்தார். இதனால் மும்பை அணியின் அதிரடி அடுத்த கட்டத்திற்கு முன்னேறியது.
சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 35 பந்துகளில் அரைசதம் அடிக்க, அதன்பின் அதிரடி உச்சத்திற்கு சென்றது. குறிப்பாக ஷேசன் அன்சாரி வீசிய 12வது ஓவரில் அடுத்தடுத்து 3 பவுண்டரி விளாசப்பட்டது. அதேபோல் 15வது ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசப்பட்டது. இதன்பின் ரோகித் சர்மா 46 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஆனாலும் சூர்யகுமார் யாதவ் பவுண்டரி அடித்து மும்பை அணியை வெற்றிபெற வைத்தார். இதன் மூலமாக 15.4 ஓவர்களில் மும்பை அணி 146 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அதேபோல் புள்ளிப் பட்டியலிலும் மும்பை அணி 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 3வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

