ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் காய்ச்சல் காரணமாக டெல்லி அணியின் கேப்டனான அக்சர் படேல் களமிறங்கவில்லை. இதனால் டெல்லி அணியின் கேப்டனாக டூ பிளஸி ஆடினார். பின் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை குவித்தது.
சிறப்பாக ஆடிய மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் 43 பந்துகாளில் 73 ரன்களை விளாசி அசத்தினார். கடைசி நேரத்தில் வந்த நமன் திர் 8 பந்துகளில் 24 ரன்களை விளாசினார். இதன்பின் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணிக்காக கேஎல் ராகுல் – டூ பிளஸி கூட்டம் தொடக்கம் கொடுத்தது.
டாப் ஆர்டர் காலி
இதில் தீபக் சஹர் வீசிய 2வது ஓவரில் டூ பிளஸி 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, 3வது ஓவரில் கேஎல் ராகுல் 11 ரன்களில் வெளியேறினார். இதனால் டெல்லி அணி 20 ரன்களுக்கு 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த அபிஷேக் போரெல் 6 ரன்களிலும் வெளியேற, ரிஸ்வி – விப்ராஜ் கூட்டணி இணைந்தது.
இதில் விப்ராஜ் நிகம் அதிரடியாக ரன்களை குவிக்க, டெல்லி அணி வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். அவர் ஆஃப் திசையிலேயே அனைத்து ரன்களை எடுக்க முயற்சித்ததை கணித்து, சான்ட்னர் கொஞ்சம் பேக் ஆஃப் லெந்தில் பவுலிங் செய்து உள்ளுக்குள் திருப்பினார். அதனை எதிர்கொள்ள முடியாமல் விப்ராஜ் 20 ரன்களில் வெளியேற, பும்ரா வேகத்தில் ஸ்டப்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மும்பை சாதனை
பின்னர் இணைந்த ரிஸ்வி – அஷுதோஷ் சர்மா இணை சில ஓவர்கள் போராடியது. ஆனால் அவர்கள் இருவரையும் சான்ட்னர் ஒரே ஓவரில் வீழ்த்த, மும்பை அணியின் வெற்றி உறுதியாகியது. பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, டெல்லி அணி 18.2 ஓவர்களில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
இதனால் மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இதன்பின் நடக்கும் போட்டிகளில் எந்த அணி டாப் 2 இடங்களுக்குள் செல்லும் என்பதே போட்டியாக இருக்கும் என்பதால், ரசிகர்கள் கூடுதல் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

