ஐபிஎல் தொடரின் நாளைய ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று சிஎஸ்கே அணி கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நாளைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குவாரா?
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது ஆர்ச்சர் வீசிய பந்து ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையில் அடித்து சென்றது. இதனால் அப்போதே ருதுராஜ் கெய்க்வாட் கொஞ்சம் திணறினார். இந்த போட்டி முடிவடைந்து கிட்டத்தட்ட 5 நாட்களாகிவிட்ட நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்-க்கு முழங்கையில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ருதுராஜ் கெய்க்வாட் இன்னும் பயிற்சியையே தொடங்கவில்லை. இந்த நிலையில் நாளைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கூறும் போது, ருதுராஜ் கெய்க்வாட் இன்று பயிற்சி செய்ய முயற்சிக்க போகிறார்.
யார் கேப்டன்?
அவருக்கு முழங்கையில் இன்னும் வலி இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் நன்றாக முன்னேற்றம் அடைந்து வருகிறார். நாளைய ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் முழு உடல் திறனை பெறுவார் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் என்னால் அவர் உறுதியாக விளையாடுவாரா என்று சொல்ல முடியாது. இதுவரை அவருக்கான மாற்று வீரராக யார் களமிறங்குவார்கள் என்பதை சிந்திக்கவில்லை.
சிஎஸ்கே அணியில் சில அனுபவம் வாய்ந்த இளம் வீரர் இருக்கிறார். அவர் வழக்கம் போல் ஸ்டம்புக்கு பின்னால் இருக்க போகிறார். கேப்டன்சியில் அவருக்கு கொஞ்சம் சிறந்த அனுபவம் உள்ளது. அதனால் நாளைய அவர் கேப்டன்சி மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். கடைசியாக 2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோனி கேப்டனாக களமிறங்கி இருந்தார்.

