கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் சென்சேஷனாக இருந்தவர் டிவால்ட் ப்ரெவிஸ். தென்னாப்பிரிக்கா அணியின் குட்டி ஏபி டி வில்லியர்ஸாக உருவெடுத்துள்ள டிவால்ட் ப்ரெவிஸ், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடரில் அசத்தலாக ஆடினார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ப்ரெவிஸ் சிறப்பாக விளையாடி வருகிறார்.
டிவால்ட் ப்ரெவிஸ் பேட்டி
சிஎஸ்கே அணியின் அடுத்த சூப்பர் ஸ்டாராக இருக்கும் டிவால்ட் ப்ரெவிஸ், தோனி குறித்து பேசிய கருத்துக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அதில், ஐபிஎல் தொடர் குறித்து யாரிடம் பேசினாலும், அதனை அற்புதமானது என்றே கூறுவேன். 4 ஆண்டு கால ஐபிஎல் தொடரில் அமைந்த பயணம் சிறப்பான ஒன்று. அந்த பயணத்தின் ஒவ்வொன்றையும் ரசித்தேன்.
எம்எஸ் தோனியின் அமைதியும், வீரர்களுக்காக அவர் எப்போதும் நிற்பதும் தனித்துவம் மிக்கது. களத்திற்கு வெளியில் வீரர்கள், மக்களுக்காக அதிக நேரம் ஒதுக்கும் வீரர் தோனி. தோனியின் கதவுகள் எப்போதும் அனைவருக்கும் திறந்தே இருக்கும். ஒருவேளை கதவுகள் பூட்டி இருந்தால், அப்போது தோனி தூங்கி கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
தோனியின் அற்புதமான கவனிப்பு
சில முறை நானும் தோனியின் அறையில் இருந்து அவருடன் உரையாடி இருக்கிறேன். அவர் என்னுடைய பொழுதுபோக்கு, கிரிக்கெட் அனுபவம் குறித்து கேட்டறிந்தார். நாங்கள் இணைந்து கிரிக்கெட் போட்டிகளை பார்த்தோம். களத்தில் வெளியில் அவர் செய்யும் விஷயங்கள் அற்புதமான அனுபவமாக உள்ளது.
பயிற்சியின் போதும், களத்திலும் தோனி என்ன செய்வார் என்று ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் களத்தில் வெளியில் தோனி செய்யும் விஷயங்கள் வேற மாதிரி அனுபவமாக இருக்கும். அதனை அனுபவித்து வருகிறேன். சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர்கள் குழு சிறந்த ஒன்று. குறிப்பாக எரிக் என்னை ஆதரித்து அணிக்குள் செட்டிலாக வாய்ப்பு அளித்தனர் என்று தெரிவித்தார்.

