இன்று டி20 உலக கோப்பையின் முதல் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடிய பாகிஸ்தான் அணி தட்டு தடுமாறி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. 148 ரன் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம் 18 பந்தில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் முக்கியமான நேரத்தில் விக்கெட்டை இழந்து அணிக்கு பெரிய நெருக்கடியை உருவாக்கினார். இது குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சனம் செய்திருக்கிறார்.
மேலும் இன்றைய போட்டியில் பாபர் அசாம் நான்காவது இடத்தில் பேட்டிக் செய்ய வந்தார். ஆனால் அந்த இடத்தில் ஏற்கனவே விளையாட வைக்கப்பட்டு வந்த அதிரடி ஆட்டக்காரர் பகார் ஜமானுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு தரப்படவில்லை. அவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதோடு அதிரடியாகவும் விளையாடுவார், குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடி காட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முகமது கைஃப் பேசும்பொழுது “சில நாட்களுக்கு முன்பு சிக்ஸர் அடிப்பேன் என்று சொன்னாயே பாபர் அசாம் இப்பொழுது அது என்ன ஆயிற்று? பாபர் அசாமுக்கு சிக்ஸர் அடிப்பதற்கான சக்தியே கிடையாது. அவர் ஒன்று இரண்டு ரன்கள் எடுத்து போட்டியை வெல்லத்தான் பார்க்க முடியும். ஒரு பந்துக்கு ஒரு ரன்தான் அவரால் எடுக்க முடிகிறது. இதைத் தாண்டி அவர் சிக்ஸர் அடிப்பதற்கு முயற்சி செய்யும் பொழுது தனது விக்கெட்டை இழந்து அணிக்கு நெருக்கடியை உண்டாக்கி விடுகிறார்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

